சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அனிதா பற்றிய காணொலியை பார்த்து  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண் கலங்கினார்.


நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் ரத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரை கண்டித்து தி.மு.க.வின் பல்வேறு அணிகள் சார்பில் மதுரையை தவிர்ந்த்து தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று (20/08/2023) உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெறுவதால் அங்கு நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி 


சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்தப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மாவட்ட்ட தலைநகரங்களில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.



உண்ணாரவிரதப் போராட்டத்தில் மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிப்பரப்பப்பட்டது. அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறும்படத்தை கண்டு கண்கலங்கினார். உதயநிதி ஸ்டாலின் மேடையில் கண்கலங்கி பலமுறை கண்களை துடைத்துக் கொண்டது பேசுபொருளாகி உள்ளது. 


அமைச்சர் உதயநிதி உண்ணாரவிர போராட்டத்தில் நிறைவுரை


இதில் பேசிய உதயநிதி.” மாணவர் ஃபயாஸ் என்னை எதிர்த்து கேள்வி கேட்டார். அவரை அழைத்துவந்து இந்த மேடையில் பேச வைத்திருக்கிறேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது. ஒருசிலர் மருத்துவப் படிப்பு இல்லையென்றால், வேறு படிப்பே இல்லையா என்று கேட்கின்றனர். அதை சொல்வதற்கு அவர்கள் யார்? மருத்துவராக ஆசைப்பட ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி உரிமை உள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள தகுதியற்ற ஒரு தேர்வுதான் இந்த நீட். இதை என்று ஒழிக்கிறோமோ அன்றைக்குத்தான் தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியல். அதை திமுக கண்டிப்பாக களத்தில் இறங்கி செய்யும்


இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஓர் ஆரம்பம், இது முடிவல்லை. ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் இது செல்ல வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாடு பிடிப்பதற்காக சண்டை போட்டோம், ஒரு மாணவரின் உயிருக்காக சண்டை போடமாட்டோமா? எனவே, மாணவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தமிழக முதல்வர் கண்டிப்பாக இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார்.” என்று தெரிவித்தார்.


மேலும், “ தமிழகத்துக்கு பாஜக என்ற ஒரு கட்சியே தேவையற்றது. இந்த நிலை தொடர்ந்து கொண்டே போனால், மத்தியில் ஆளும் பாஜகவுடன் சேர்த்து அதிமுகவையும் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். மதுரையில் அதிமுக மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. அங்கு தீர்மானம் நிறைவேற்றப்படும். நான் ஒரே ஒரு சவால் விடுகிறேன். அதிமுக மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள். மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானம் மட்டும் போட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அவர்களே, உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இதில் நான் அரசியல் செய்யவில்லை. உங்கள் கட்சியின் இளைஞரணி அல்லது மாணவர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். நாங்களும் வருகிறோம். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துக் கொள்ளலாம்.” என்று பேசினார்.