தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. தினசரி 35 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது, உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து நேற்று ஒரே நாளில் 397 நபர்கள் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் கருப்பு பூஞ்சை வைரசின் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.


தமிழகத்திலும் கருப்பு பூஞ்சையின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 பேர் பாதிக்கப்பட்டு, 41 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை 9 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.




கருப்பு பூஞ்சை ஏற்கனவே உள்ள வியாதி என்றும், இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வியாதி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையே அதிகம் பாதிக்கும் என்றும் கூறியிருந்தார். இருப்பினும், கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படுவோரை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.