• 1991 மே 21ஆம் தேதி ஸ்ரீபெரம்புதூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுகிறார்

  • இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக நளினியும், இரண்டாவது குற்றவாளியாக சுரேந்திரராஜா என்ற சாந்தனும், ஸ்ரீதரன் என்கிற முருகன் மூன்றாவது குற்றவாளியாகவும், ராபர்ட் பயஸ் என்கிற குமாரலிங்கம் 9வது குற்றவாளியாகவும், ஜெயக்குமார் முறையே 10வது, ரவிச்சந்திரன் 18வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்

  • 1998 ஜனவரி 28ல் இதில் கைது செய்யப்பட்ட இந்த ஏழு பேரையும் சேர்த்து மொத்தம் 26 பேருக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது

  • இந்த மரண தண்டையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டு, நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிசந்திரன் என்ற இந்த மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது

  • 1999 – ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்த நால்வரும் தங்களது மரண தண்டனையை ரத்துச் செய்ய வலியுறுத்தி, அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவிக்கு கருணை மனு போடுகிறார்கள் – ஆனால் அந்த மனு நிராகரிக்கப்படுகிறது

  • 2000ஆம் ஆண்டில் நளினி தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது

  • அதே நேரத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் இந்த மூவரும் தங்களது தூக்கையும் ரத்து செய்ய வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு 2000ஆம் ஆண்டில் கருணை மனு அனுப்புகிறார்கள். இந்த மனு 11ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட பின்னர், 2011ல் தள்ளுபடி செய்யப்படுகிறது

  • இதற்கு இடைப்பட்ட நேரத்தில் 2008ஆம் ஆண்டில் வேலூர் பெண்கள் சிறையில் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி நளினியை வந்து சந்தித்து சென்றது பரபரப்பானது

  • அதன்பிறகு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இந்த மூவருக்குமான தூக்கை ரத்து செய்து ஆயுளாக குறைத்தது. இது நடந்தது 2014 பிப்ரவரி 18 அன்று.

  • பிப்ரவரி 19ஆம் தேதியே சிறையில் உள்ள ஏழு பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார்

  • ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி இந்த ஏழு பேரையும் விடுவிடுக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான அமர்வு 2015ல் உத்தரவு பிறப்பிக்கிறது

  • இதனையடுத்து 2016 மார்ச் 2ல் ஏழுபேரையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது தமிழக அரசு

  • இது ஒருபக்கம் போகையில், 2018ல் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

  • தீர்ப்பை சுட்டிக்காட்டி 2018 செப்டம்பர் 9ஆம் தேதி ஏழுபேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது

  • ஆனால், மூன்றாண்டுகள் இந்த தீர்மானத்தை கிடப்பில் போட்ட ஆளுநர், இதில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என அவருக்கு அனுப்பி வைக்கிறார்

  • இந்நிலையில்தான், ஏழு பேரையும் விடுவிக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்துவிட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், ரவிசந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், நளினி ஆகிய இந்த ஏழு பேரும் இதன் பிறகாவது விடுவிக்கப்படுவார்களா அல்லது அவர்களது மிச்ச வாழ்நாளையும் சிறையிலேயே கழிக்கப்போகிறார்களா என்பதை இனி குடியரத் தலைவர்தான் முடிவு செய்யவேண்டும்.