குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கக் காசை உரிமையாளிடம் கொடுத்து தான் ஒரு சொக்கத் தங்கம் என நிரூபித்திருக்கிறார் தூய்மைப் பணியாளர் ஒருவர்.


கணேஷ் ராமன் கூரியர் கம்பெனியில் வேலை செய்கிறார். தான் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தில் 100 கிராம் தங்கக் காசு ஒன்றை வாங்கியுள்ளார். அதனை தனது கட்டிலுக்குக் கீழ் வைத்திருந்தார். ஆனால் அதனை அவருடைய மனைவியிடம் தெரிவிக்கவில்லை. மனைவியோ கட்டில், மெத்தையை சுத்தம் செய்யும் போது கட்டிலுக்குக் கீழிருந்த பார்சலை ஏதோ குப்பை என நினைது தூக்கி எறிந்துள்ளார்.




இதனை கேட்டு திடுக்கிட்ட கணேஷ் ராம், உடனே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தன் வீட்டில் குப்பை அகற்றியது யார் என்பதை அறிந்து கொண்டு சாத்தாங்குளம் காவல்துறையை நாடியுள்ளார். ஆனால், கணேஷ் ராம் வீட்டில் குப்பையை அகற்றிய மேரி என்ற பெண் ஏற்கெனவே அந்தத் தங்கக்காசை தனது மேலாளரிடம் கொடுத்திருந்தார். அதனால் போலீஸ் விசாரித்தபோது ஏற்கெனவே தங்கக் காசு பத்திரமாக நிறுவனத்திடம் இருப்பது தெரியவந்தது.


கணேஷ் ராம் தம்பதியிடம் நேற்று காவல்நிலையத்தில் வைத்து மேரி மூலமாக தங்கக்காசு ஒப்படைக்கப்பட்டது. 100 கிராம் தங்கக்காசை காவல்துறை விசாரிக்கும் முன்னரே கூட இது நமக்குச் சொந்தமானது அல்ல என்று உணர்ந்து கொடுக்கும் மனசு தான் தெய்வம் என்றால் அது மிகையாகாது.


இதேபோல் பல நேரங்களில் பல செய்திகளை நாம் படித்திருப்போம். ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை எடுத்து உரிமையாளரிடம் கொடுத்த நபர், குப்பையில் கிடந்த பணக் கட்டை எடுத்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர் என பல செய்திகளை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். 


மேலும் செய்திகளைப் படிக்க ABPNadu ட்விட்டர் தளத்தைப் பின்தொடருங்கள்:-