கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 4,186 அடி உயரத்தில் தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி ஆறு தோன்றுகிறது. அதே மாவட்டத்தில் புஷ்பகிரி மலையில் உருவாகும் ஹாரங்கி ஆறு காவிரி உடன் கலக்கிறது. பின்னர் சிக்மங்களூரு மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஹேமாவதி மற்றும் லட்சுமன தீர்த்தம் ஆகிய ஆறுகள் மாண்டிய மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
இப்பகுதியில்தான் கிருஷ்ண ராஜசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் உருவாகும் கபினி ஆறு திருமாக்கூடலு நரசிப்புரா என்ற இடத்தில் காவிரி உடன் கலக்கிறது. இந்த இடத்தில்தான் கபினி அணை கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுடன் அர்கவதி ஆறு கலந்து கன்னட மொழியில் மேகே தாட்டு (ஆடு தாண்டும் இடம்) எனப்படும் ஆழமான குறுகிய பாறைகள் வழியாக பயணித்து தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைகிறது. கர்நாடகாவில் 320 கிலோ மீட்டர் பாயும் காவிரியாறு தமிழகத்தில் 416 கிலோ மீட்டர் தூரத்தில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு ஹேமாவதி ஆற்றில் 35.76 டி.எம்.சி கொள்ளளவும், ஹாரங்கி ஆற்றில் 8.07 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட அணைகளையும், மாண்டியா மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே 45.05 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையையும், கபினி ஆறு காவிரியுடன் கலக்கும் பகுதியில் 15.67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஐந்தாவது அணையாக தமிழக எல்லைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் காவிரியாறு பாயும் குறுகிய பகுதியான மேகதாதுவில் 9,000 கோடி செலவில், 67.14 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்ட தீவிரம் காட்டி வருகிறது கர்நாடக அரசு. இதன்மூலம் பெங்களூருவுக்கு குழாய் மூலம் 4.75 டி.எம்.சி நீரை கொண்டு செல்லவும், 400 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையம் கட்டவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணைகளின் மூலம் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் கொள்ளளவு 171 டி.எம்.சி ஆக அதிகரிக்கும்.
காவிரி நதிநீர் பிரச்னையில் முதலில் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த மறுத்து உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் தீர்ப்பாயம் மூலம் 192 டிஎம்சியாக குறைக்கப்பட்டு பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 177 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 171 டி.எம்.சி நீரை அணைகள் மூலம் கர்நாடக அரசு தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுமையாக கிடைக்காது என்பதே தமிழக அரசு மேகதாது அணை கட்டுமானத்தை எதிர்க்க முக்கிய காரணியாக உள்ளது.
மேததாது அணையை கட்ட கர்நாடக முதல்வர்களாக இருந்த சித்தராமைய்யா, குமரசாமி ஆகியோர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் தற்போது முதல்வராக உள்ள எடியூரப்பாவும் அதில் தீவிரம் காட்டி வருகிறார். 2018ஆம் ஆண்டில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது.
சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்த ஒப்புதல் கோரி கர்நாடக அரசு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை முதல் வாரத்தில் கடிதம் எழுதியிருந்தார். மேகதாது திட்டத்தால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பதாது எனவும், தேவைப்படுமாயின் மேகதாது அணை குறித்த அச்சங்களை போக்க இருமாநில அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தவும் எடியூரப்பா கோரியினார். ஜூலை 4ஆம் தேதி எடியூரப்பாவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் பெங்களூரு நகரின் 4.75 டி.எம்.சி நீர்த்தேவைக்காக மேகதாதுவில் 67 டி.எம்.சி கொள்ளளவு அணையை கட்டுவதை ஏற்க முடியாது என தெரிவித்திருந்தார்.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக ஆணைகட்ட முடியாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத் உறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்த நிலையில் மேகதாது அணை கட்ட செயல் திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாது அணையை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் டெல்லி சென்று மனு அளிக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.