தமிழ்நாடு சட்டப்பேரவையில், திராவிட மாடல், அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட வார்த்தைகளை, ஆளுநர் ஆர். என்.ரவி உரையில் தவிர்த்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி, பெரும் விவாதத்துக்கு உள்ளானது.


இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அதில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை, அரசு தயாரித்த உரையே மரபுப்படி குறிப்பில் இடம்பெற வேண்டும், ஆளுநர் சொந்தமாக பயன்படுத்திய வார்த்தைகள் இடம்பெற கூடாது என்ற தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்தார்.


இந்நிலையில், முதலமைச்சர் ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை வாசித்து கொண்டிருக்கையிலேயே ஆளுநர்  வெளியேற்றம் செய்தார். அவை முடிவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்,ரவி வெளியேற்றம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான தகவலில், 


மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தது என்பது பிழை எனவும் மாநில அரசின் பங்களிப்பால் மட்டுமே தமிழக மீனவர்களின் விடுதலை என்பதை எப்படி ஏற்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிக்கல் தொடர்பாக செய்தி வெளியாகிய நிலையில், அமைதி நிலவுகிறது என்பது கள நிலவரம் இல்லை எனவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது