பெண்கள் உயர்கல்வி பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் மண்டல அலுவலகத்தின் சார்பில் திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெறும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சியை இன்று துவக்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசின் மக்கள் தொடர்பகம் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய நாட்டின் விடுதலை என்பது எளிதில் கிடைத்தது என்று நினைத்துவிடக்கூடாது. அண்ணல் காந்தியடிகள் போன்ற பல்வேறு தலைவர்கள், பல ஆண்டுகள் சிறை வாசம், பல இன்னல்களை அனுபவித்துத்தான் விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளனர். இன்று சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்கிறோம் என்றால், அத்தகைய தலைவர்களின் தியாகங்கள்தான் காரணம், இவர்களின் தியாகங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இது போன்ற தியாகத் தலைவர்கள் எல்லா மாவட்டங்களிலும் வாழ்ந்துள்ளனர், அவர்களை பற்றி நாம் அறிந்துகொள்ளத்தான் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியா இன்று ஜனநாயக நாடாக இருப்பதற்கு காரணமாக இருந்தவர் அண்ணல் காந்தியடிகள், அவர் அகிம்சை வழியில்தான் போராடினார். அதேபோன்று நாம் நமது கோரிக்கைகளை அகிம்சை வழியில் தான் பெற முயற்சிக்க வேண்டும், நாட்டில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும், நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் இளைஞர்களிடம் வரவேண்டும், இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, நாட்டின் எதிர்காலத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல நாம் நம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்றார் கு.பிச்சாண்டி.
இந்தியா உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது, இந்தியாவில் பெண் கல்வி அதிகரித்துள்ளது, இந்தியாவில் 55 சதவீதம் பெண்கள் உயர்கல்வி பயிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
பெண்கள் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்ற வகையில் தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ்கிறது. கிருஷ்ணகிரியில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மத்திய -மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத நிலை மாறி இன்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வி பெற்று வருகின்றனர், மத்திய -மாநில அரசுகள் சேமிப்பு திட்டம், முதியோர் திட்டம், ஓய்வூதியத் திட்டம், போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, இத்திட்டங்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும், மத்திய மக்கள் தொடர்பகமும் இணைந்து செயல்படுகின்றன.
அரசு தனது கடமையை செய்கிறது, பெற்றோர்கள் தங்களது கடமையை செய்கிறார்கள், மாணவர்களும் தங்களது கடமையை செய்ய வேண்டும். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல் மாணவர்கள் அவற்றை முறையாகப் பயின்று பயன்பெறவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும், வேளாண்மைத்துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஹரிகுமார், காசநோய் மருத்துவப் பிரிவு துணை இயக்குநர் அசோக், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கந்தன், கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அஞ்சல் துறை, வேளாண்மைத் துறை, இந்தியன் வங்கி, போன்ற துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக வேலூர் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பர அலுவலர் சு.முரளி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக வேலூர் மத்திய மக்கள் தொடர்பக அலுவலக கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ் நன்றி கூறினார்.