மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25.06.2023 முதல் 27.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், தென்காசி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் ஜூனா மாத தொடக்கத்தில் கொளுத்திய வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அனேக இடங்களில் குளிர்ந்த வானிலையே நிலவி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் தொடங்கி நகரம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் அதிகாலை வரை நகரத்தின் அனேக இடங்களில் மழை பதிவானது. கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டர்)
நுங்கம்பாக்கம்: 10.0, மீனம்பாக்கம்: 0.6, வால்பாறை: 1.0, சேலம்: 0.3, புதுச்சேரி: 3.0, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு): 1.5, எம்ஆர்சி நகர் (சென்னை): 3.0, தரமணி (சென்னை): 4.5, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை): 7.0,ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்): 7.5, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் (திருவள்ளூர்): 11.0, புழல் (திருவள்ளூர்): 17.0 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
24.06.2023 மற்றும் 25.06.2023: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26.06.2023 மற்றும் 27.06.2023: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
27.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.