தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதன்படி இன்று,  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை  பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


அதனை தொடர்ந்து 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னையில் காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


வெம்பக்கோட்டை (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா  5, கடம்பூர் (தூத்துக்குடி, கழுகுமலை (தூத்துக்குடி), கயத்தார் (தூத்துக்குடி) தலா  4, பவானிசாகர் (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா  3, புத்தன் அணை (கன்னியாகுமரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா  2, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி) தலா  1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.