மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 19 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உறைபனி எச்சரிக்கை:
17.01.2024 மற்றும் 18.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிமூட்டம் இருக்கும். குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக இருக்கும். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவு கடும் பனிமூட்டம் இருக்கும். இதனையடுத்து கடந்த சில வாராங்களாக வட மாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 5 நட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களில் வெப்பநிலை குறைந்து பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் வாரியாக ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி தொடங்கியுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும்.