உலக அளவில் பல்வேறு வகையான அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையையும் உழவையும் போற்றும் திருநாள். இதில் நான்காவது நாளான காணும் பொங்கல் கொண்டாடப்படும் முறையும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் காணலாம்.
காணும் பொங்கல்:
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவைகள் காணும் பொங்கல் அன்றைக்கு நடைபெறும். உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும்.
கன்னிப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமணம் ஆகாத பெண்கள் ஒரு தட்டில் பழங்கள், தேங்காய், பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களுடன் அருகில் இருக்கும் ஆறு அல்லது குளங்களுக்கு செல்வார்களாம். ஆற்றங்கரையில் எல்லோரும் சேர்ந்து கும்மியடித்து பாடி இறை வழிபாடு நடத்துவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. காணும் பொங்கல் அன்று சிலர் நோன்பு கடைப்பிடித்து சிறப்பு வழிபாடு செய்வதும் உண்டு. இது உடன்பிறந்தவர்களின் நலனுக்காக செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. காணும் பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு நடத்துவதையும் சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர்.
நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்
சென்னை பொறுத்தவரை மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு கடற்கரைக்கு சென்று தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கலாம். சுமார் சென்னை கடற்கரை பகுதியில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்டத்தை பொறுத்து போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு வர வேண்டும் என்று நினைத்தால், கோவளம் இருக்கிறது. அதேபோன்று சிற்பங்களை ரசித்துக்கொண்டே கடற்கரையின் அழகை பார்க்க மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரலாம்.
மகாபலிபுரத்தில் ஏற்பாடுகள் என்ன ?
மகாபலிபுரத்தை பொருத்தவரை செங்கல்பட்டு மாவட்டம் போலீஸ் சார்பில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் புறவழிச் சாலை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிக்கு உள்ளே செல்வதற்கு தனியாக மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா?
பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணும் பொங்கலை வண்டலூரில் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் காணும் பொங்கலை முன்னிட்டு 40,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கூட்டம் கூடுவதை தடுக்க கியூ ஆர் குறியீடு வசதியுடன் கூடிய 10 டிக்கெட் கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை உடனுக்குடன் ஸ்கேன் செய்து உள்ளே அனுப்ப ஏழு ஸ்கேனிங் எந்திரங்கள் மற்றும் திட்டங்கள் 20 இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதி, சிறுவர்கள் காணாமல் போனால் எளிதாக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுதல், மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100 வனத்துறை அதிகாரிகள் 100 காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுபோக தன்னார்வலர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்ற உள்ளனர்.
ப்ளூ பீச்
நீல கடற்கரை என அழைக்கக்கூடிய ப்ளூ பீச் கோவளம் மற்றும் முத்துக்காடு பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. பார்ப்பதற்கே வித்தியாசமாகவும், அதே வேளையில் சுத்தமாகவும் இருக்கக்கூடிய இந்த பீச்சையும் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம். சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் கோவளம் அருகே அமைந்துள்ளது. மற்ற கடற்கரையை காட்டிலும் இங்கு குழந்தைகளுடன் செல்வது பாதுகாப்பாக கருதப்படுகிறது.
படகில் பயணிக்க ஆசையா ?
படகில் பயணிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் முத்துக்காடு அரசு படகு குழாம், முதலியார் குப்பம் படகு குழாம் ஆகிய இடத்திற்கு செல்லலாம்.
பறவைகளை பார்க்க ஆசையா ?
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்று வரலாம். தற்பொழுது பறவைகள் நிறைந்து காணப்படுவதால் நிச்சயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சென்று வந்தால் மகிழ்ச்சி தரும். அதே போன்று பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரலாம். இதுபோக சென்னை புறநகர் பகுதியில் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று வரக்கூடிய இடங்கள் உள்ளது.
போலீசார் பாதுகாப்பு பணி
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.