தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு சென்ற ஸ்டாலின்:
கடந்த 23ஆம் தேதி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற ஸ்டாலின், நேற்று முன்தினம் 3 முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து, வர்த்தக உறவுகள், முதலீடுகள் குறித்து பேசியதுடன், உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதை தொடர்ந்து, சிங்கப்பூர் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை நேற்று சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
"தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும்"
இதையடுத்து, இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, ஸ்டாலின் நேற்று ஜப்பானின் ஒசாகாவுக்கு சென்றார். அவரை ஒசாகாவுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார்.
ஒசாகாவில் ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவுடன் இணைந்து, இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும், பல முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் உள்ள ஜப்பான் நிறுவனங்களை பட்டியலிட்டு பேசினார். "ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது. மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம்.
"ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம்"
தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகம் பெறும் நாடு இந்தியா தான். இந்தியாவில் தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னிலையில் விளங்குகிறது. உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய அழைக்கிறோம்" என ஸ்டாலின் தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
பின்னர், தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்ஃப்லேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குனர் கென் பாண்டோவும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணுவும் கையெழுத்திட்டனர்.