தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஊரடங்கு தொடங்கியுள்ளது. முதல் இரு அலைகளில் புரட்டிப் போட்ட கொரோனா, மீண்டும் மூன்றாவது அலை மூலம் எட்டிப் பார்த்திருக்கிறது. தடுப்பூசி என்கிற பேராயுதம் இருந்தும், முன்னெச்சரிக்கை என்கிற முறையில் அரசு எடுத்துள்ள மற்றொரு ஆயுதம் தான் இந்த ஊரடங்கு. நாளை முதல் இரவிலும் ஞாயிறு அன்று முழுநாளும் அமலுக்கு வரும் என அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஞாயிறு ஊரடங்கு குறித்து பொதுமக்கள் தரப்பு கருத்து என்ன என்பது குறித்து ஏபிபி நாடு களமிறங்கியது. இதோ மக்கள் கருத்து...
ஜான் மேரி, மீன் வியாபாரி, திருவாரூர்:
தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊரடங்கு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் மீன் மற்றும் கறி உள்ளிட்ட இறைச்சிப் பொருள் வாங்குவதற்காக அதிக அளவில் மக்கள் கூடுவார்கள். நான் ஒரு மீன் வியாபாரி ஒரே இடத்தில் அதிகமாக கூடாதீர்கள் முக கவசம் அணியுங்கள் என்று சொன்னால்கூட பொதுமக்கள் கேட்க மாட்டார்கள். ஆகையால் முழு ஊரடங்கு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். ஊரடங்கிற்கு முன்பே தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது வெளியில் செல்லாமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
ச.மீ.இராசகுமார், காரைக்குடி:
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மழை வெள்ளம் என மக்கள் தப்பிப் பிழைப்பதே சவலாக இருக்கிறது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொழில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இரவு நேர ஊரடங்கை மட்டும் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மீண்டும் ஒரு லாக் டவுன் என்றால், எழுந்தவர்கள் எல்லாம் மீண்டும் வீழ்ந்து விடுவார்கள். கட்டுப்பாடுகளை அதிகரித்து, தடுக்க வேண்டுமே தவிர, முடக்க கூடாது. உயிர் முக்கியம்; அதை விட உயிர் வாழும் சூழம்.
சித்தேந்திரன், கம்பம், தேனி:
கொரோனா வைரஸ் பரவல் முதல் அலை வந்த போதே யாராலயும் தாங்க முடியல அது முடிந்து மீண்டும் இரண்டாவது அலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் பொருளாதார நெறுக்கடியும் ஏற்பட்டது. இந்த நிலையிலும் அதுலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துட்டு இருக்கோம். இந்நிலையில் மூன்றாவதுஅலை அதுமட்டுமல்ல ஒமிக்கிரான் வைரஸ் என்ற ஒரு புதிய வைரஸ் ஒன்று பரவுவதாக வரும் தகவல்கள் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் மேலும் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ,2021 இந்த இரண்டு வருடமும் காணாமல் போய்விட்டது. ஆனால் இனிவரும் நாட்களிலாவது சிரமமில்லாமல் இருக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு இந்த மூன்றாவது அலையின் பொதுமுடக்கம் மிகவும் கொடூரமானது. .கொரோனா வைரஸ்சால சாகுறோமோ இல்லையோ பட்டினியால சாக போறவங்க எண்ணிக்கையை அதிகரிக்கும். இனி புதுசா தொழில் செய்யவும் முடியாது, இப்ப தொழில் தொடங்குனவங்க யாரும் நிலைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கு. இந்த பொது முடக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.
சஞ்சய், சேலம் மாவட்டம்:
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பது பயனற்ற ஒன்று. இரவு ஊரடங்கு சுத்த வேஸ்ட். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு பிற நாட்களில் ஊரடங்கை அமுல் படுத்தலாம். அல்லது திங்கள், புதன், சனிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் கடைகளும் மற்ற நாட்களில் ஜவுளி, நகைக்கடைகள் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டால் கொரோனா குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு நாள் ஊரடங்கு போடுவதால் பெரிய பயன் இருக்காது என்பது என்னுடைய கருத்து.
பாலகிருஷ்ணன் காஞ்சிபுரம்:
கொரோனா எனும் பெருந்தொற்று இன்னும் நம்மை விடாமல் துரத்தி கொண்டு உள்ளது. ஏற்கனவே நாம் இரண்டு அலைகள் பார்த்து உள்ளோம். அதில் இருந்து நாம் கண்டிப்பாக எப்படி இதை அணுக வேண்டும் என தெரிந்து வைத்து இருக்க வேண்டும். தற்போது ஞாயிற்று கிழமை ஊரடங்கு வந்து உள்ளது. இதில் அனைத்து பொது மக்களும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது அனைவரும் தடுப்புசி மற்றும் அனைத்து இடங்களில் செல்லும் போது மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும். இல்லை எனில் ஞாயிற்று கிழமை மட்டும் உள்ள ஊரடங்கு அனைத்து நாட்களும் வர கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. இப்படி வரும் போது நாம் அனைவருமே பாதிக்கப்படுவோம். நோய் எதிர்ப்பு சக்தி தரகூடிய பொருட்களையும் எடுத்து கொள்ள வேண்டும். முக்கியமாக நாம் ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவத்திற்கு இந்த முறை முக்கியதுவம் கொடுத்தால் மூன்றாம் அலையில் இருந்து பெரிய பாதிப்புகளை தவிர்க்கலாம். பொங்கலம் பொருட்களுடன் கபசூர பாக்கெட்டும் சேர்த்து 22 பொருட்கள் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்