தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா  ஐ.ஏ.எஸ். உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


யார் இந்த அமுதா ஐ.ஏ.எஸ்.?


தமிழ்நாட்டின் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அமுதா ஐ.ஏ.எஸ். சுதந்திரப் போராட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அமுதா ஐஏஎஸ், தன் சிறு வயது முதலே ஐஏஎஸ் கனவுடன் வளர்ந்தவர். தொடர்ந்து கல்லூரி முடித்து முழுமூச்சாகப் படித்து 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் பதவியை வசமாக்கிய அமுதா,  கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக தன் பணியைத் தொடங்கினார். 


தொடர்ந்து திண்டுக்கல், தருமபுரி மாவட்ட ஆட்சியர்,  உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் எனப் பயணித்து பிரதமர் அலுவலக இணைச் செயலர் வரை பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.


கருணாநிதி, ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்:


2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட அமுதா ஐஏஎஸ் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு மணல் கொள்ளை கும்பல்களுக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட அமுதா ஐஏஎஸ் பல லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளார்


முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா இருவரது நல் அபிப்ராயத்தையும் பெற்ற அமுதா ஐஏஎஸ், மகளிர் வளர்ச்சிக்காக என்றுமே செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகபல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 


பல் பிடுங்கப்பட்ட விவகார விசாரணை:


மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தன் தமிழுக்காக அவரிடம் பாராட்டுகளைப் பெற்ற அமுதா ஐஏஎஸ், அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து பலரது பாராட்டுகளைப் பெற்றார். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரது இறுதிச்சடங்கு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துள்ளார். 


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக இந்த விவகாரத்தில் 24 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ஐ.பெரியசாமியுடன் மோதலா?


இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமிக்கும், ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த அமுதாவிக்கும் முட்டல் மோதல் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகின.


அமுதா ஐஏஎஸ் இத்துறையை முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அமைச்சர் உயநிதி ஸ்டாலினிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள் புகார் தெரிவிப்பதாகவும் சென்ற வாரத்தில் புகார் தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் அமுதா ஐஏஎஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்படி அமுதா  ஐ.ஏ.எஸ். உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.