தேர்தல் நடத்தை விதிமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சுங்கக் கட்டண உயர்வு, இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Continues below advertisement

தற்போது தேர்தல் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து , ஜூன் 1 முதல் புதிய திருத்தப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு அதிகாரப் பூர்வமாக அமலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டண விகிதங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீன் 1 முதல் உயர்வு

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்த விதிமுறைகளின்படி , நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் கட்டணங்கள் ஒவ்வோரு ஆண்டும் பண வீக்கம் மற்றும் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன்படி ,கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ஒன்றிய அரசின் தற்காலிக மொத்த விலை குறியீட்டெண் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் கட்டணத்தை உயர்த்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Continues below advertisement

இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால், இறுதி செய்யப்பட்ட புதிய சுங்கக் கட்டண விகிதங்களை அரசால் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் முடிவுக்கு வந்து , நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து , தற்போது ஜூன் 1 முதல் இந்த புதிய கட்டண உயர்வு தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச் சாவடிகளிலும் அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது.

அனைத்து வாகனங்களுக்கும் உயர்வு இல்லை

இந்த புதிய கட்டண உயர்வு அனைத்து தரப்பு வாகனங்களையும் ஒரே மாதிரியாகப் பாதிக்காது என்று அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினசரி பயணிக்கும் பொது மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிவாரணமாக, கார்கள், ஜீப்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கான ஒருமுறை பயணம் மற்றும் இருவழிப் பயணக் கட்டணங்களில் எந்தவித சுங்கக்கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

பல அச்சு கொண்ட பெரிய வணிக வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு லாரிகளுக்கு ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணம் சுமார் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு முக்கியமாக வழக்கமாகச் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும் மாதாந்திர பாஸ் உபயோகிப்பாளர்களையே பாதிக்கும். அவர்களுக்கான பாஸ் கட்டணங்கள் வாகன வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு

சொந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு நேரடியாகக் கட்டணம் உயர்த்தப்படாததால் தினசரி அலுவலகம் செல்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும், லாரி, பேருந்து மற்றும் பல அச்சு கொண்ட பெரிய சரக்கு வாகனங்களுக்கான கட்டண உயர்வு மற்றும் மாதாந்திர பாஸ் விலை அதிகரிப்பு ஆகியவை மறைமுகப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் துவண்டு போய் உள்ள மக்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

சரக்குக் கட்டணங்கள் மற்றும் லாரி வாடகைகள் சற்று உயர வாய்ப்புள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. ஜூன் 1 முதல் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் இந்த புதிய கட்டணங்கள் முறைப்படி வசூலிக்கப்பட உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்களின் பாஸ்டேக் கணக்குகளைப் போதிய இருப்புடன் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்