" வீட்டில் போதைப் பொருள் இருக்கா - செக் பண்ணனும் "

சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த 53 வயதாகும் செல்வி வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் டெல்லியில் பணியாற்றி வருகிறார். கடந்த மே 23 - ம் தேதி இரவு செல்வியின் வீட்டுக்கு 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் என்று கூறி உள்ளனர்.

Continues below advertisement

பின்னர், வீட்டில் போதைப் பொருள் மறைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறி சோதனை செய்துள்ளனர். ஆனால் வீட்டில் போதைப் பொருள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

பணம் தயாரா ? தொலைபேசியில் வந்த அழைப்பு

செல்வியிடம் உங்கள் மகன் மீது போதைப் பொருள் வழக்கு இருக்கிறது. அவரை கைது செய்யாமல் இருக்க ரூ.1 லட்சத்தை கொடுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என செல்வி கூறியுள்ளார். காதில் அணிந்திருந்த கம்மல் , கையில் போட்டிருந்த தங்க மோதிரங்களை இரக்கமே இல்லாமல் அந்த இரண்டு பேர் பறித்துள்ளனர்.

Continues below advertisement

பின்னர் பணத்தை தயார் செய்யும் படி கூறி விட்டு வெளியில் சென்று விட்டார்கள். சிறிது நேரம் கழித்து செல்வியின் செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள், ரூ.1 லட்சம் ரெடியாகி விட்டதா ? என்று கேட்டுள்ளனர்.

செல்வி தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை 'ஜி-பே' மூலம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். மீதி ரூ.50 ஆயிரத்தையும் தயார் செய்யுங்கள் என்று கூறிவிட்டு மர்ம நபர்கள் இருவரும் போனை வைத்துள்ளனர்.

நகைகள் - பணம் மீட்பு

சந்தேகம் அடைந்த செல்வி , கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். செல்வி வசித்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம், செல்வியிடம் நகை மற்றும் பணத்தை பறித்ததாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் சுகுமார் ( வயது 43) மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த சக்திவேல் ( வயது 33) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். செல்வியிடம் பறித்த தங்க நகைகள், ரூ.50 ஆயிரமும் மீட்கப்பட்டது.

இவர்களில் பிரவீன் சுகுமார் ஊர்க் காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில், போலீஸ் ரோந்து வாகன டிரைவராகவும் பணியாற்றுகிறார். அவரது தந்தை ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.

போலீஸ் போல் நடிப்பு 

கைதான சக்திவேல் மீது ஏற்கனவே போதைப் பொருள் வழக்கு இருக்கிறது. பிரவீன் சுகுமார் , யாராவது போதைப் பொருள் விற்றால் தனக்கு தகவல் கொடுக்கும்படியும், உயர் அதிகாரிகளிடம் அந்த தகவலை சொன்னால் தனக்கு ரொக்கப் பரிசு கிடைக்கும் என்றும் சக்திவேலிடம் கூறினார்.

சக்திவேல் ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் சிக்கியவர் என்பதால், செல்வியின் வீட்டை காட்டி, அங்கு போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவலை சொல்லியதுடன் போலீஸ் போல நடித்து, அவரது வீட்டையும் சோதனை செய்து பணம் நகையை பறித்தது தெரிய வந்துள்ளது.