தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 13.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும் பாபநாசம் (திருநெல்வேலி) 2, செங்கோட்டை (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 1 செ. மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மாவட்டத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் (101.12 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி – 38.0 டிகிரி செல்சியஸ், சேலம், துருப்பத்தூர் – 37 டிகிரி செல்சியஸ், மதுரை, திருச்சி, வேலூர் – 36 டிகிரி செல்சியஸ், கோவை, பாம்பன், திருத்தணி – 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 33 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
வேலூரில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. காரைக்காலில் இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸும், கோவையில் 1.3 டிகிரி செல்சியஸும், திருத்தணி, தொண்டி ஆகிய பகுதிகளில் 1.2 டிகிரி செல்ஸியல் வெப்பநிலை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் வறண்ட வானிலை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கத்தரி வெயில் தொடங்க இருக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிகபட்சமாக 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.