கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கிரிவலப் பாதையில் உதயநிதி ஆய்வு:


இதில், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்படும் இடங்களை, தன்னுடைய காரிலேயே வலம் வந்து ஆய்வு செய்தார்.


இதை கிண்டல் செய்த பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், "உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக்கொண்டு கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்றார்.


இதற்கு பதிலடி அளித்த உதயநிதி, "இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம்.


நக்கலடித்த தமிழிசை:


நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்! ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்! ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்.


 






நியாயம் தானே...! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என பதிவிட்டுள்ளார்.