சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல என்றும் சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ரவி, "சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. சிலர், இதில் வேறுபாடு காட்டி குளிர்காய நினைக்கிறார்கள். அதற்கு அவசியம் இல்லை. இதை பற்றி தெரியாதவர்கள் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர்.
"சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை"
சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல. சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. நமது நாட்டின் தனித்துவம் என்னவென்றால் தர்மத்திற்கு, உண்மைக்கு எதிராக நிலை ஏற்படுகின்றதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுத்து வருகின்றார்.
நமது நாட்டில் அதேபோன்று தான் வள்ளலார் பெருமானும் அவதாரத் செய்தார். வேதத்தில் பல நூறாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது. இந்த நாட்டில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை என்று.
ஆங்கில ஆக்கிரமிப்பால் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நமது தத்துவ குடும்ப வாழ்வு சிதைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் வள்ளலார் பெருமான் அவதரித்தார். நமது அடையாளத்தையும் தர்மத்தையும் இழந்து இருந்த காலத்தில் ஒருங்கிணைத்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி ஏற்ற தாழ்வு நிலையை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தவர் வள்ளலார்.
தமிழ்நாடு ஆளுநர் கூறியது என்ன?
தமிழ்நாட்டில் பல அவதார புருஷர்கள் அவதரித்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் பிரிந்திருந்த மக்களை ஒருங்கிணைத்து சென்றுள்ளனர். அதனால் தான் பாரதத்தின் புன்னிய பூமி தமிழ்நாடு. ஆன்மீக பூமி தமிழ்நாடு. என்றைக்கும் இல்லாத போன்று இன்றைய நாளில் வள்ளலாரின் தேவை உலகத்திற்கு அதிகமாக தேவை படுகின்றது. அந்த அளவு உலகம் பிரிந்து கிடக்கின்றது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பல மக்கள் போரால் கொலை செய்யப்படுகின்றனர். வழிகாட்டுதல் இல்லாததால் மன அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர்.
இங்கு மக்களுக்கு போதிய நிம்மதி இல்லை. பொதுமக்கள் மிகுந்த மன வருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வள்ளலார் நமக்கானவர் மட்டும் அல்ல உலக அமைதிக்கானவர். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் பலநாடுகளால் ஒதுக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்த்தவர் பாரத பிரதமர் மோடி.
பல நாடுகள் கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசிகளை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போட்ட நிலையில் 120 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்து ஜீவகாருண்ய கருணையால் அனுப்பிவைத்தார்" என்றார்.