தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி உதகையில் நாளை தொடங்கி வைக்கவுள்ள மாநாடு திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடமோ, உயர்கல்வித்துறை அமைச்சரிடமோ எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை, அழைப்பும் விடுக்கப்படவில்லை.
நாளை ஊட்டியில் '2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும்' என்ற பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணை வேந்தர் மாநாட்டை நடத்துகிறார். நாளை, நாளை மறுநாள் ஊட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துக் கொள்கிறார்கள். பல்வேறு பேராசிரியர்களும் கலந்துக் கொள்ளும் இவ்விழாவில் ஸோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கலந்து கொள்கின்றனர். ஆனால் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளும்படி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர். துணை வேந்தர்களை தற்போது ஆளுநர்தான் நியமித்து வருகிறார். முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில், பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் பதவி வகிக்கும் நிலையில் அவரது பொறுப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதையடுத்து தமிழ்நாட்டிலும் துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக அரசே நியமனம் செய்யும் மசோதாவை விரைவில் தாக்கல் செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் சமீபத்தில் சட்டசபையில் கூறிருந்தார்.
ஏற்கெனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உரசல்போக்கு நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதா திமுக ஆட்சிக் காலத்திலேயே 2 முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டும் அதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் ஆளுநர். முதன்முறை அனுப்பப்பட்டபோது அதை, 208 நாட்களுக்கு பிறகு ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை காமாலை கண்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பினார். தொடர்ந்து எந்த திருத்தமும் செய்யாமல் ஒரே வாரத்தில் திருப்பி அனுப்பபட்டது.
இதையடுத்து சித்திரை 1 அன்று ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை திமுக, மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. இதையடுத்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்குமான மோதல்போக்கு வெளிப்படையாக தெரியவந்தது. இதையடுத்து புறக்கணிப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு ஆளுநர் மாளிகையில் கவனிப்பார் இன்றி கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில், அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கக்கூடிய தேநீர் விருந்து என்ற விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும், அதனால்தான் கலந்துக்கொள்ளவில்லை என்று கூறினார். நீட் உட்பட 11 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஆளுநர் ரவி சமீபத்தில் மயிலாடுதுறையில் தருமாபுரத்திற்கு சென்றபோது, திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி காட்டின. தொடர்ந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில் அதை இன்னும் பெரிதுப்படுத்தும் விதமாகத்தான் உதகையில் நாளை ஆளுநர் தொடங்கி வைக்கவுள்ள மாநாடு இருக்கிறது என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கோ, உயர்கல்வித்துறைக்கோ இதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை.
மேலும் கால்நடை, மீன்வள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். தொடர்ந்து சமீப நாட்களில் தன்னிச்சையாக துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததார் ஆளுநர். இந்நிலையில் இப்போது மாநாட்டையும் நடத்துகிறார் ஆளுநர் ரவி. ஏற்கெனவே சூடுபிடித்துள்ள தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்