திருவண்ணாமலை பயணத்தின் ஒருபகுதியாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன்.ரவி மண்பாண்ட கலைஞர்களுடன் மண்பாண்டங்களை செய்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.


தமிழகத்தின் மண்பாண்டக்கலை மிகவும் பழமை வாய்ந்ததாகும். கைத்திறனுடன் வண்ணம் கூட்டி மண்பாண்டம் செய்வதே ஒரு கலையாகும்.
முதுமக்கள் தாழிகளை மண்ணில் செய்யப்பட்டவை என்பது அறியத்தக்கதாகும், மண் சார்ந்த தொழில்களை மேற்கொள்வோரை மணிமேகலைக் காப்பியம் மண்ணீட்டாளர் என்று குறிப்பிடுகிறது.






அந்த மண்பாண்ட கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி மண்பாண்டம் செய்யும் கலைஞர்களை சந்தித்து உரையாடி ஊக்குவித்தார். 




அதோடு, ஆளுநர் ரவி திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயிகளின் இயற்கை சிறுதானியங்கள் மற்றும் வேளாண் சார் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் இடம்பெற்ற ஸ்டால்களை பார்வையிட்டார். நேற்று, முதல் நிகழ்வாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களுடன் ஓர் சந்திப்பு மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 


அப்போது பேசுகையில், “திருவண்ணாமலை ஆன்மீக பூமி. சிவன் வாழும் பூமி. நினைத்தாலே முக்தி தரும் பூமி. அருணாசலேஸ்வரர் மண்ணில் கால் வைத்தது பெருமையாக நினைக்கிறேன். நமது நாட்டில் ரிஷிகளாலும் சாதுக்களின் தவத்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட நாடு. நாம் அனைவரும் அவர்களின் குழந்தைகள். சனாதன தர்மம் என்பது தனிமனிதனுக்கானதல்ல பாரத தேசத்திற்குரியது ஆகும். பறந்து விரிந்த பிரார்த்தனையே சனாதன தர்மம் ஆகும். 


இந்த நாடு 1947 இல் உருவாக்கப்பட்டதல்ல 1947-ல் விடுதலை மட்டுமே அடைந்தோம், பாரத நாட்டின் ஆன்மீக தலைநகர் இந்த மாநிலம் என்பது எனக்குத் தெரிந்தது. ரிஷிகள் சாதுக்கள் நாம் யார் என்பதை உணர்த்தியுள்ளார்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதே சனாதன தர்மம் ஆகும். நமது ஆன்மீக வளர்ச்சி நமக்கு மட்டுமானது அல்ல உலகிற்கே ஆனது. மற்ற நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால் நமது நாடு ரிஷிகளாலும் சாதுக்களின் தவத்தாலும் உருவாக்கப்பட்ட நாடு. பாரத நாட்டின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு உள்ளது என்பது எனக்கு தெரியவந்துள்ளது. ரிஷிகள், சாதுக்கள் அனைவரும் நாம் யார் என்பதை உணர்த்தியுள்ளார்கள். ஆன்மீகத்தை தவிர்த்து மற்றதில் கவனம் செலுத்தினால் மேற்கிந்திய நாடுகள் போல நம் நாடு ஆகிவிடும்.


முழுமையான முன்னேற்றத்தை நோக்கி நாடு நடை போடுகிறது. நமது ஆன்மீக வளர்ச்சி நமக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆனது ஆகும். போர் இயற்கை சீற்றம் ஆகியவைகள் மனிதனின் எதிர்மறை விளைவுகளால் வந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் அமைதியான பூமி. கிரிவலம் வருவது மன நிம்மதியை தரக்கூடியது. உலக அளவில் இந்தியா ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உடைய நாடு. கிரிவலப் பாதையில் தங்கியுள்ள சாதுக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


ஆன்மீகவாதிகள் ஆசிரமத்தை வைத்துக்கொண்டு சேவை செய்வதை விட மற்றவர்களுக்கும் சேவை செய்ய முன்வர வேண்டும். கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் இருப்பதற்கு அனுமதி கிடையாது. இதை அகற்ற முடிந்தவரை நான் நிறைவேற்றி தருவேன்” என்றார்.