செங்கல்பட்டு அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

 


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் , இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். கடந்த ஒரு வாரமாக இதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கஸ்தூரி என்பவரிடம் அனுமதி வாங்குவதற்காக அலைந்து திரிந்துள்ளார். 


 

இந்நிலையில் அரசு ஊழியர்  கஸ்தூரி அனுமதி வழங்குவதற்கு 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சுப்பிரமணி 1800 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி தன்னிடம் அரசு ஊழியர் கஸ்தூரி லஞ்சம் கேட்பதாக செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியிடம் கொடுத்து அனுப்பினர். 

 

இதனைத்தொடர்ந்து காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு டிஎஸ்பி சரவணன் தலைமையில் வந்த 7-பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மறைந்திருந்து சுப்பிரமணியனிடம், கஸ்தூரி லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.