தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் சட்டபேரவையில் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை அவர் தொடங்கினார். தொடர்ந்து  தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை பாராட்டியதோடு, அரசு செயல்படுத்தி வரும் வரும் திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டு பேசினார். 


பொதுவாக ஆளுநர் ஆங்கிலத்தில் தனது உரையை படித்து முடித்த பின்னர், சபாநாயகர் அப்பாவு தமிழில் அதனை மொழிப்பெயர்த்து வழங்குவார். அந்த வகையில் ஆளுநருக்கு அளிக்கப்பட்ட உரையில் திராவிட வளர்ச்சி பாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதனைத் தவிர்த்து விட்டு ஆளுநர் தன் உரையை படித்து முடித்தார். அதேபோல் சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. 



சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பிற இடங்களில் THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது சலசலப்பு நிலவியது. ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுகவினர் ஆளுநர் திராவிடம் என்ற வார்த்தை தவிர்த்ததாக தெரிவித்தனர். மேலும் அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் சபை மரபை அவர் மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். 


திராவிடம்...திராவிட மாடல் 


இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் மொழிப்பெயர்த்து வழங்கினார். அப்போது அவர் சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை கொண்டு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள், பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்கு அதிகாரமளித்து அவர்களின் நலன் காத்துள்ள இந்த திராவிட வளர்ச்சி பாதையில் இந்த அரசு மேலும் உத்வேகத்தோடு பீடு நடைபோடும் என தெரிவித்தார். 


இதேபோல் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய ஆய்வில், தமிழ்நாடு இந்தியாவின் பெரிய மாநிலங்களில் முதன்மை மாநிலம் என தெரிவித்துள்ளது. இந்த சாதனை முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சிக்கு அளிக்கப்பட்ட நற்சான்றாகும் என சொல்லி, திராவிட மாடல் வார்த்தையை 2 முறை அழுத்தி சொன்னார். இதனை திமுக உறுப்பினர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.