தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் என்பதற்கான சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்தச் சட்டம் ஆளுநரிடம் 4 மாதங்களாக நிலுவையில் இருந்தது. 


இந்நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அப்படியொரு கடிதமே எழுதப்படவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இரு தரப்பில் இருந்தும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந் நிலையில், விளக்கம் கேட்டதாக ஒரு தரப்பும் அப்படி கேட்கவில்லை என மற்றொரு தரப்பும் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தொடர்ந்து உலாவரும் நிலையில், எது சரி என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் உறுதியாகும் என்பதே தற்போதைக்கு உண்மை.


பின்னணி என்ன?


தமிழ்நாட்டிலுள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்து வருகிறார். இந்தப் பல்கலைக் கழகங்களில்  துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்து வந்தது.  துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர். ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவார்கள். 


இந்தத் தேடல் மற்றும் தேர்வுக் குழு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை ஆய்வு செய்யும். அதன்பின்னர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து 3 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். இவர்களில் ஒருவரை ஆளுநர் பல்கலைக் கழக துணைவேந்தராக தேர்வு செய்வார். 


 






இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இதைத் தொடர்ந்து 'தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் களை மாநில அரசே நியமனம் செய்யும் மற்றும் தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.


துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தை ஆளுநர் சரியாக கலந்து ஆலோசிக்கவில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த மசோதாவிற்கு சட்டமன்றத்தில் பாஜகவை தவிர இதர கட்சிகள் அனைத்தும் ஒரு மனதாக ஆதரவு அளித்திருந்தனர். இதனால் சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


இதைத் தொடர்ந்து இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த 4 மாதங்களாக இந்த மசோதா மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அந்தச் சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது அப்படியொரு கடிதமே அனுப்பப்படவில்லை என தகவல்கள் பரவுகின்றன. இது தொடர்பாக, ஆளுனர் மாளிகை தரப்பும் சரி, அரசு தரப்பும் சரி, இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் எது உண்மை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மாநிலங்கள்:


குஜராத் மாநிலத்தில் 1949ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குஜராத் பல்கலைக் கழகங்கள் சட்டம் 1949-ன்படி மாநில பல்கலை கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அதேபோல் தெலங்கானா மாநிலத்திலும் தெலங்கானா பல்கலைக் கழகங்கள் சட்டம் 1991-ன்படி அங்கு உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்ய முடியும். இதேபோல் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம் ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்பட்டது. 


அதாவது துணைவேந்தர்களை தேர்வுச் செய்யும் குழு 5 நபரை தேர்வு செய்து மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்களில் இருந்து 2 பேரை அரசு தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பும். அவர்களில் இருவரில் ஒருவரை ஆளுநர் துணை வேந்தராக நியமிக்க முடியும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.