கடந்த ஜூலை 23-ஆம் தேதியன்று தமிழ்நாடு பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணாமலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். அண்ணாமலை ஆளுநரை சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படத்தை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.



மக்கள் பிரச்னை தொடர்பாக கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தபோது புகைப்படம் எடுக்க ஆளுநர் மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைத்தலங்களில் பதிவிட்டுள்ள விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு , கடந்த ஜூலை 8-ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் ஆதி திராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கோரி மனு அளித்தார். அப்போது ஆளுநருடன் புகைப்படம் எடுக்க அனுமதி கோரியபோது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதனை மறுத்ததாக குற்றம்சாட்டி உள்ள வன்னியரசு, தான் யாருடனும் புகைப்படம் எடுப்பதில்லை என்ற ஆளுநர் பாஜகவினருடன் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொள்வது சரியா என வினவி உள்ளதுடன் ராஜ்பவனா? கமலாலயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.



இதேபோல் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸும் தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 8ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் எம்.பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தபோது ஆளுநர் புகைப்படம் எடுக்கும் வழக்கமில்லை எனக்கூறி மறுத்ததாகவும், ஆனால் கடந்த ஜூலை 23ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தபோது ஆளுநருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருப்பதும் ஆளுநரின் மாற்றந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



ஆளுநர், சனாதன, சங் பரிவார் அமைப்புகளுக்கு மட்டும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதென்பது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையதல்ல, தமிழ்நாடு ஆளுநர் பாஜகவில் ஏதேனும் மிகப் பெரிய பொறுப்பை எதிர்பார்க்கிறாரோ என எண்ணத் தோன்றுவதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளதுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.