தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்காக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்பட இருக்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது தற்போதைய ஆளும் கட்சியான திமுக, தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் யாருக்கு எந்தவொரு தொகையும் வழங்கப்பட வில்லை என அதிமுக, பாஜக என அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் வழங்கப்படும் உரிமைத்தொகையின் திட்டமானது வருகின்ற செப்டம்பர் 15ம் தேதியான அண்ணா பிறந்த நாளில் இருந்து வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என அழைக்கப்படும் என்றும் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின்படி, இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் இன்று (ஜூலை 20ம் தேதி) முதல் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முழு விவரம்:
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பதிவு செய்வதற்கு சென்னையில் 2 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. சென்னையில் நடைபெறும் முதற்கட்ட விண்ணப்பதிவானது வருகின்ற ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதற்கட்ட பதிவில் டோக்கன் விண்ணப்பம் தங்களுக்கு வரவில்லை என்றால், 2ம் கட்டத்தில் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். வங்கி கணக்கு இல்லாத மகளிர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதிவு :
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் விண்ணப்பதிவு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும்.
காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும், உணவு இடைவெளிக்கு பிறகு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன அடையாள அட்டைகள் வேண்டும்..?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய ஆதார் அட்டம், மின்கட்டண ரசீது, குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), வங்கி பாஸ் புக் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்றதும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டு கைரேகை பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்படும். அப்படி, கைரேகை பதிவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் மூலம் சரிபார்க்கப்படும்.
மேலும், வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு வனத்துறையினர் உதவியுடன் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் எனவும், குடும்ப அட்டை இல்லாதவர்கள் குறித்து தனியாக பதிவு செய்யப்பட்டு, இல்லாத ஆவணங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.