பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சட்டத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை விதித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். 


மத்திய உள்துறை அமைச்சக உத்தரவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடை அமலுக்கு வந்தது. இந்த அமைப்பு குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அதிகாரமளித்துள்ளது. 


கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோத சங்கமாக அறிவித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.


மத்திய அரசு விதித்த தடை: 


முன்னதாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.


அதேபோல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளும் தடை விதித்தது மத்திய அரசு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலங்களில் 2 முறை சோதனை நடந்த நிலையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. 






பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டி சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயற்சிப்பதாக என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பான நிர்வாகிகளின் அலுவலங்கள், வீடுகளில் என்.ஐ.ஏ கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொண்டது. அப்போது இந்த அமைப்பு பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்று மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனை சார்ந்த துணை அமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை செய்யபடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அரசாணை வெளியிட்டது. 


அதன்படி, ரெகப் இந்தியா பவுண்டேஷன் (RIF), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC), தேசிய மனித உரிமைகள் அமைப்பு (NCHRO), நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா போன்ற அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது. 


செப்டம்பர் 22 மற்றும் செப்டம்பர் 27 ஆகிய தேதிகளில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்க இயக்குநரகம் (இடி) மற்றும் மாநில போலீசார் பிஎஃப்ஐ மீது சோதனை நடத்தினர்.


முதற்கட்ட சோதனையில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில்,  இரண்டாம் கட்ட சோதனையில், PFI ஐச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏக்கு இந்த அமைப்புக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.