காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் கேஸ் குடோன் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த சத்தத்துடன் தீ பரவி உள்ளது. சிலிண்டர் குடோனுக்குள்ளே இருந்து பரவிய தீயானது மலமலவென, குடோனுக்கு வெளியேவும் பற்றி எரியத் தொடங்கியது. இதன் காரணமாக குடோன் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியது. சம்பவம் நடைபெற்ற பொழுது 10 ஊழியர்கள் குடோனுக்குள்ளே இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த தீ விபத்தானது சுற்றி இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால், அப்பகுதி குடியிருப்பு பகுதியில் இருந்த, பொதுமக்களும் இந்த தீ விபத்தால் பலத்த காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட இதுவரை 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 10 க்கும் மேற்பட்டோர் 90 சதவீத தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. 


90 சதவீதம் தீக்காயம் அடைந்தோர் பட்டியல்:



  1. சண்முகப்பிரியன் (வயது 17)

  2. தமிழரசு (வயது 2)

  3. நிவேதா (வயது 20)

  4. பூஜா (வயது 22)

  5. சத்யா (வயது 20)

  6. கோகுல் (வயது 24)

  7. ஜீவானந்தம் (வயது 51)

  8. கிஷோர் (வயது 13)

  9. அருண் (வயது 30)

  10. குணா (வயது 30)

  11. சக்திவேல் (வயது 32)

  12. ஆமோத்குமார் (வயது தெரியவில்லை)


சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார மூலம் தீ பரவக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து இந்த கிராமம் உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களில் மின்வெட்டு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.