ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு மீண்டும் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த பி. சங்கர் ஐஏஎஸ், விவசாயம் - விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு சாலை திட்டம் II-இன் திட்ட இயக்குநராக பதவி வகித்து வந்த எஸ். பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கணக்கெடுப்பு மற்றும் தீர்வுத்துறை இயக்குநராக பதவி வகித்து வரும் மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ், கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரித்துறையின் மக்களுடன் முதல்வர் திட்ட அதிகாரியாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே, ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார்.



  • சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆக இருந்த ரமேஷ் சந்த் மீனா,  திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.

  • தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனரான சோபனா, எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

  • சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த கவிதா ராமு,  தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்

  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த அபூர்வா, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்

  • வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்

  • கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்

  • விழிப்பு பணி ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கோபால் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.


கடந்த மாதம், கரூர், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் ஐஏஎஸ், வணிக வரித்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோரும் மாற்றம் செய்யப்பட்டனர்.