மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின் துறை பல முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்கட்டமைப்பு, 30.4.2024 அன்று ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 2.5.2024 அன்று 20.830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்விதத் தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசு.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி:


10.9.2023 அன்று காற்றாலை மூலம் பெறப்பட்ட அதிகபட்ச மின் உற்பத்தி 120.25 மில்லியன் யூனிட்டுகளும் 23.4.2024 அன்று சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச மின் உற்பத்தி 40.50 மில்லியன் யூனிட்டுகளும் தமிழ்நாடு மின்சாரத் தேவைகளை ஈடுசெய்வதில் பெரிதும் துணைபுரிந்துள்ளன. இந்த அரசு பதவியேற்ற நாளில் இருந்து 3.984 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், தமிழ்நாடு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த நிறுவு திறன் 8.496 மெகாவாட்டாக உயர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது.


2021- 2022 ஆம் ஆண்டில் கட்டடங்களின் கூரைகள் மேல் நிறுவப்பட்ட சூரிய மின் சக்தி திறனுக்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சம் (MNRE) ரூ.7.9 கோடி ஊக்கத் தொகை வழங்கித் தமிழ்நாட்டைப் பாராட்டியுள்ளது.


தருமபுரியில் 12 மெகாவாட், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 மெகாவாட் இணை மின் திட்டங்கள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான பழைய திறனற்ற 16.8 மெகாவாட் காற்றாலைகளை மீண்டும் வலுப்படுத்திடும் முயற்சியில் திராவிட மாடல் அரசு ஊக்கம் தந்துள்ளது.


மின் உற்பத்தி:


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதில் ஆர்வம் கொண்டு செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின் வாரியத்திற்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களின் மூலம் 2020-21-ல், உற்பத்தி செய்யப்பட்ட 15,554 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம். 2021-22ஆம் ஆண்டில் 20.391 மில்லியன் யூனிட்டுகளாக இது 31.1 சதவீதம் ஆகும். இது 2022-23 ஆம் ஆண்டில் 22,689 மில்லியன் யூனிட்டுகளாக 11.27 சதவீதம் அதிகரித்தது. மேலும், 2023-24 ஆம் ஆண்டில் 25,479 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 12.3 சதவீதமும் அதிகரித்து தொடர்ந்து சாதனைகள் படைக்கப் பட்டுள்ளன.


அதேபோல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 2021-22 & 2022-23 ஆம் ஆண்டுகளில் ஒன்றிய மின் ஆணையம் நிர்ணயித்த இலக்கை விட 1.660.36 மற்றும் 2.261.08 மில்லியன் யூனிட்கள் முறையே கூடுதலாக உற்பத்தி படைக்கப்பட்டுள்ளன. 


மிக்ஜாம் புயலுக்குப் பின்


மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் 11,164 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் 24 மணி நேரமும் இடைவேளையின்றி போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறுகிய காலத்தில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.


தென் மாவட்டங்களில் அதீத கன மழைக்குப் பின்


தென் மாவட்டங்களில் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய நாட்களில் பெய்த வரலாறு காணாத அதீத கன மழையால் ஏற்பட்ட சேதங்களை, 5,920 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் 24 மணி நேரமும் இடைவேளையின்றி போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறுகிய காலத்தில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.


சென்னையில், மழைக்காலங்களின் போது மழை நீர் தேங்கும் இடங்களில் உள்ள மின் தூண் பெட்டிகள் (Pillar Box) கண்டறியப்பட்டு, 5.086 மின்தூண் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மழைக் காலங்களின் போதும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக. துணை மின் நிலையங்களில் உள்ள 41 திறன் மின் மாற்றிகளின் அடித்தளம் 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.