அரசுப்‌ பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும்‌ பயிற்‌சி தொடர்பாக மனித வள மேலாண்மைத்‌ துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ ரத்து செய்ய வேண்டும்‌ என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. 


இதுகுறித்துத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


கடந்த 18-03-2022 அன்று நிதியமைச்சர்‌ 2022-23 ஆம்‌ ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையினை தமிழக சட்டமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்தார்‌. அதில், "பணியமர்த்தல்‌ மற்றும்‌ பயிற்சிக்கான விதிகளில்‌ சில திருத்தங்கள்‌ மேற்கொள்ளும்‌ பணியினை இவ்வாண்டு தொடங்கி உள்ளோம்‌. மனிதவளம்‌ தொடர்பான சீர்திருத்தங்கள்‌ மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறு மாத கால அளவிற்குள்‌ முன்மொழிவதற்கான மனிதவள சீர்திருத்தக்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


நிதி அறிக்கையினை வெளியிட்ட போதே இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள்‌ அரசு ஊழியர்‌- ஆசிரியங்கள்‌ சங்கங்களிடம்‌ எழுந்தன. இந்நிலையில்‌, 18-10-2022 அன்று மனிதவள மேலாண்மைத்‌ துறையானது அரசாணை எண்‌ 115ல்‌ மனிதவள சீர்திருத்தக்‌ குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்தக்‌ குழுவின்‌ ஆய்வு வரம்புகள் கவலையளிப்பதாக உள்ளது.


* பன்முக வேலைத்‌ திறனோடு பணியாளர்களின்‌ ஆட்சேர்ப்பு மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும்‌.


* அரசின்‌ பல்வேறு நிலைப்‌ பணியிடங்கள்‌ / பதவிகள்‌ / பணிகள்‌ ஆகியவற்றை திறன்‌ அடிப்படையில்‌ ஒப்பந்த முறையில்‌ நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது


* பரந்துபட்ட முறையில்‌ பிரிவு டி மற்றும்‌ சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம்‌ நிரப்புவதற்கான சாத்தியக்‌ கூறுகளை ஆராய்வது ,


* தொழிலாளர்‌ சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை அதாவது வெளிமுகமை ஆட்சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனிதவள அரசுப்‌ பணியிடங்களை அவற்றைக்‌ கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக்‌ கூறுகளை ஆராய்வது


* அரசின்‌ உயர்நிலைப்‌ பணியிடங்களை தனியார்‌ நிறுவனங்களுடன்‌ ஒப்பிட்டு அப்பணியிடங்களின்‌ வேலைத்திறன்‌ மற்றும்‌ மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல்‌


* பணியாளர்கள்‌ ஒப்பந்த முறையில்‌ நியமித்து, குறிப்பிட்ட காலத்திற்குப்‌ பிறகு அவர்களின்‌ பணிச்‌ செயல்பாடுகளை ஆய்வுசெய்து, அதன்பிறகு அவர்களைக் காலமுறை ஊதியத்தில்‌ கொண்டுவருவதற்கான சாத்தியக்‌ கூறுகளை ஆராய்வது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனிதவள சீர்திருத்தக்‌ குழுவின்‌ ஆய்வு வரம்புகளில்‌ ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து வரம்புகளுமே பணியாளர்‌ விரோத நடவடிக்கை என்பதோடு, சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்‌. 


தலைமைச்‌ செயலகத்தில்‌ தொகுதி டி என்ற பிரிவின்‌ கீழ்‌ வரும்‌ அலுவலக உதவியாளர்கள்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ உள்ளிட்ட பணியாளர்களின்‌ ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில்‌ 50 விழுக்காட்டிற்கு மேல்‌ காலியாக உள்ளது. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எப்போதோ அரசால்‌ கைவிடப்பட்டுவிட்டது. அதே நிலைமைதான்‌, தமிழகத்தின்‌ அனைத்து நிலை தொகுதி பணியிடங்களுக்கும்‌ காணப்படுகிறது. அப்பணியிடங்களை வெளி முகமை மூலமாக ஒப்பந்தப்‌ பணியிடங்களாக நிரப்புவதற்கான ஆலோசனைகள்‌ பல்வேறு தலைமைச்‌ செயலகக்‌ துறைகளால்‌ தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.


இப்பணியிடங்களைப்‌ பொறுத்தவரையில்‌, சமூகத்தின்‌ அடித்தட்டு மக்கள்‌ தங்களால்‌ படிப்பினைத்‌ தொடர முடியாமல்‌ பல்வேறு சூழ்நிலைகளில்‌ பாதிக்கப்படுவோருக்கு இதுநாள்‌ வரையில்‌ தொகுதி “டி” மூலமாக அரசுப்‌ பணியில்‌ வருவதற்கான வாய்ப்பாக இருந்தது. இந்த வாய்ப்பானது கடந்த 10 ஆண்டுகளாக முற்றிலும்‌ மறுக்கப்பட்டு விட்டது.


தொகுதி “டி” காலிப்‌ பணியிடங்களுக்குத்தான்‌ இந்த அவலநிலை என்றிருந்தால்‌, தற்போதைய மனிதவள மேலாண்மைத்‌ துறையின்‌ அரசாணையில்‌ தொகுதி சி பணியிடங்களையும்‌ தனியாரிடம்‌ தாரை வார்ப்பதற்கான முகாந்திரங்களுக்கு சிவப்புக்‌ கம்பளம்‌ விரித்துள்ளது.


ஆட்சி மாறினாலும்‌ காட்சிகள்‌ மாறவில்லை என்பதைத்தான்‌ தற்போதைய மனிதவள மேலாண்மைத்‌ துறையின்‌ அரசாணை 115 தெளிவுபடுத்துகிறது. நிதிநிலை அறிக்கையில்‌ தெரிவித்த கருத்துகளுக்கான பின்புலம்‌ என்பது, சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்பது தெரிய வருகிறது. 


மேலும்‌, இந்த அரசாணை வெளியிடப்பட்டு, இதுநாள்‌ வரை மனிதவள மேலாண்மைத் துறையின்‌ இணையப்‌ பக்கத்தில்‌ வெளியிடப்படாமல்‌ இருப்பது, தமிழக அரசு அனைத்துத்‌ துறைகளிலும்‌ வெளிப்படை தன்மையுடனும்‌ ஒளிவுமறைவற்ற‌ தன்மையுடனும்‌ செயல்பாடுகளை பொதுமக்களிடம்‌ கொண்டு சேர்க்கும்போது, மனிதவள மேலாண்மைத்‌ துறையின்‌ நடவடிக்கையானது பெரும்‌ சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனிதவள சீர்திருத்தக்‌ குழு கமுக்கமான முறையில்‌ செயல்படப்‌ போகிறது என்பதனை வெளிச்சம்‌ போட்டுக்‌ காட்டியுள்ளது.


மேலும்‌, இக்குழுவின்‌ எல்லை வரையறைகளைப்‌ முழுமையான அரசுப்‌ பணியினை கார்ப்பரேட்‌ மயமாக்கும்‌ நடவடிக்கையே என்பது தெள்ளத்‌ தெளிவாகிறது. அரசுப்‌ பணியின்‌ மதிப்பீடு என்பது லாப நட்டக்‌ கணக்குப்‌ பார்க்கக்கூடிய விஷயமல்ல.


ஏற்கனவே, தனியார்‌ வசம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ள பல்வேறு நிலை மருத்துவச்‌ சேவைப்‌ பணிகளின்‌ நிலை என்பது அனைவரும்‌ அறிந்ததே. பணியாளர்களின்‌ பணித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதில்‌ யாருக்கும்‌ மாற்றுக்‌ கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால்‌, அனைத்தையும்‌ தனியார்‌ வசம்‌ ஒப்படைக்கும்‌ நடவடிக்கை என்பதனை எள்ளளவும்‌ ஏற்க இயலாது. தனியார்‌ வசம்‌ ஒப்படைக்கும்போது, அவர்கள்‌ லாப நோக்கத்துடன்‌ இயங்குவார்களே அன்றி சேவை மனப்பான்மையோடு செயல்பட வாய்ப்பில்லை.


தற்போது தனியார்‌ துறைகளிலும்‌, இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தி அனைத்துத்‌ தரப்பு மக்களையும்‌ பாதுகாத்திட வேண்டும்‌ என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும்‌ சூழ்நிலையில்‌, அரசியலமைப்புச்‌ சட்டத்தின்கீழ்‌ அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலமாக அரசுப்‌ பணிக்குப்‌ பணியாளர்களை தேர்வு செய்யாமல்‌ வெளிமுகமை / ஒப்பந்த அடிப்படை / தனியார்‌ வசம்‌ என சில பணிகளை விடுவது என்பது முற்றிலுமாக தமிழக அரசு பின்பற்றுகின்ற 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அதாவது சமூக நீதிக்கு எதிரானதாகும்‌.


அரசுப்பணியில்‌ தற்போது 35 விழுக்காட்டிற்கும்‌ மேல்‌ காலிப்பணியிடங்கள்‌ இருக்கும்‌ நிலையில்‌, அப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு என்பது இல்லாமல்‌ போய்விடும்‌ சூழ்நிலை 'ஏற்பட்டுள்ளது. இதனால்‌ படித்து விட்டு, அரசுப்‌ பணிக்கு தங்களை தயார்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ இளைஞர்களின்‌ எதிர்காலம்‌ என்பது கேள்விக்குறியாகி உள்ளதோடு, இந்நிலை என்பது சமூகத்தில்‌ மிகப்‌ பெரிய அளவில்‌ ஏற்றத்தாழ்வினை உருவாக்கி, சமூகச்‌ சீர்கேட்டிற்கும்‌ சட்டம்‌ ஒழுங்கு கெடுவதற்கும்‌ வாய்ப்பாக அமையும்‌.


மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்த உடனேயே வழங்கும்‌ நடைமுறை தற்போது பின்பற்றப்படாமல்‌, 6 மாத காலம்‌ காலந்தாழ்த்தி அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவதும்‌, 1-7-2022 முதல்‌ ஒன்றிய அரசு அறிவித்த 4 விழுக்காடு அகவிலைப்படி இன்றும்‌ வழங்கப்படாமல்‌ இருப்பதும்‌, ஈட்டிய விடுப்பினை சரண்‌ செய்யும்‌ சலுகையும்‌ காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும்‌ வழங்கப்படாமல்‌ இருப்பதும்‌ அரசு ஊழியர்கள்‌ ஆசிரியர்களிடையே பெரும்‌ ஏமாற்றத்தினையும்‌ வருத்தத்தினையும்‌ ஏற்படுத்தியுள்ளது. 


வழக்கமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படியும்‌ சரண்‌ விடுப்பும்‌ மறுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்‌, பழைய ஓய்வூதியத்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படுமா என்பதும்‌ அனைத்து அரசு ஊழியர்கள்‌- ஆசிரியர்கள்‌ மத்தியில்‌ மிகுந்த மனச்‌ சோர்வினை ஏற்படுத்தியுள்ள நிலையில்‌, இனிமேல்‌ அரசுப்‌ பணி என்பதற்கே வாய்ப்பில்லை என்ற நிலையைஏற்படுத்தக்கூடிய மனிதவள மேலாண்மைத்‌ துறையின்‌ அரசாணை 115 ஆனது, வெந்த புண்ணில்‌ வேல்‌ பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.


தமிழக முதலமைச்சர்‌ இந்த விஷயத்தில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, தமிழகத்தில்‌ நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ மூலம்‌, சமூக நீதியை நிலைநாட்டும்‌ வகையில்‌, இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும்‌ வகையிலும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ ரத்து செய்திட வேண்டும்‌ என்று‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.


இவ்வாறு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துள்ளது.