TN GIM 2024 Investment: சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு:


ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை சாத்தியப்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்து பல்வேறு துறை தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இதன் மூலம், தமிழ்நாட்டில் புதியதாக தொழில்களை தொடங்குவது மற்றும் ஏற்கனவே இருக்கும் தொழில்களை விரிவுபடுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


துறைவாரியான முதலீடுகள்:


வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் மூலமாக மொத்தமாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளாக ஈர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, உற்பத்தித் துறையில் அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாயும், எரிசக்தித் துறை சார்பாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாயும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக 62 ஆயிரத்து 939 கோடி ரூபாயும், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக 22 ஆயிரத்து 130 கோடி ரூபாயும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக 63 ஆயிரத்து 573 கோடி ரூபாயும் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முதலீடு செய்த நிறுவனங்களின் விவரங்கள்:



  • வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியில் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது. இதன் மூலம், 6 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

  • டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் 12 ஆயிரத்து 82 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. வேலைவாய்ப்பு - 40,500 

  • இந்திய நிறுவனமான JSW நெல்லை மற்றும் தூத்துக்குடியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் 6,600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

  • ஹுண்டாய் நிறுவனம் 6 ஆயிரத்து 180 கோடி ரூபாய் செலவில் 50 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி வழங்குகிறது 

  • அமெரிக்காவைச் சேர்ந்த சோலர் நிறுவனமான FIRST SOLAR காஞ்சிபுரத்தில் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஆலையை தொடங்க உள்ளது. வேலைவாய்ப்புகள் - 350

  • டிவிஎஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள 5000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன

  • தைவானைச் சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் செங்கல்பட்டில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய திட்டங்களை தொடங்க உள்ளது. வேலைவாய்ப்பு - 8,000

  • ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான மிட்சுபிஷி திருவள்ளூர் மாவட்டத்தில் 200 கோடி ரூபார் முதலீடு செய்கிறது. வேலைவாய்ப்பு - 60% பெண்களுக்கு வேலை

  • கோத்ரேஜ் நிறுவனம்  செங்கல்பட்டில் 515 கோடியை முதலீடு செய்து தொடங்கும் தொழிற்சாலையில் 9000 வேலைவாய்ப்புகள் உருவாகும்

  • குவால்காம் நிறுவனம் சென்னையில் 177 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. வேலைவாய்ப்பு- 1,600

  • டாடா பவர் நிறுவனம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 70 ஆயிரத்து 800 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், மொத்தமாக 3800 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

  • அதானி குழுமம் மொத்தமாக 37 ஆயிரத்து 700 கோடி ரூபாயை முதலீடு செய்து 5000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது

  •  சிபிசிஎல் நிறுவனம் நாகப்பட்டினத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. வேலைவாய்ப்பு - 2,400

  • எல் & டி நிறுவனம் சென்னையில் 3 ஆயிரத்து 500 கோடிகளை முதலீடு செய்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது

  • ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 2000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

  • மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சென்னையில் 2740 கோடி ரூபாய் முதலீடு செய்து, 167 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது

  • ஹிந்துஜா குழுமம் செங்கல்பட்டில் செய்ய உள்ள 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 300 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது

  • ஹைலி குளோரி ஃபுட்வியர் நிறுவனம் கள்ளக்குறிச்சியில் 2 ஆயிரத்து 302 கோடி செலவில் புதிய ஆலையை தொடங்க உள்ளது. வேலைவாய்ப்பு - 2000

  • ஸ்டெல்லண்டிஸ் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் 2000 கோடி முதலீடு செய்கிறது

  • Feng Tay நிறுவனம் விழுப்புரத்தில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 6000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன

  • திருவளூர் மாவட்டத்தில் கார் உற்பத்தி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  ரிசார்ட்கள் உள்ளிட்ட திட்டங்களுக்காக மஹிந்திரா நிறுவனம்  ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்கிறது. வேலைவாய்ப்பு - 4000

  • காவேரி மருத்துவமனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பன்னோக்கு மருத்துவமனைகளை ஏற்படுத்த ஆயிரத்து 200 கோடி முதலீடு செய்கிறது. வேலைவாய்ப்பு - 7,500

  • ராமநாதபுரத்தில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. வேலைவாய்ப்பு - 500

  • ஜிண்டால் டிபென்ஸ் நிறுவனம் திருச்சியில் ஏரொஸ்பேஸ் துறையில் ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. வேலைவாய்ப்பு - 800

  • ராமகிருஷ்ண டிடாகர் ரயில் வீல்ஸ் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 850 கோடி முதலீடு செய்கிறது. வேலைவாய்ப்பு - 1400

  • ராம்ராஜ் மற்றும் ஷாஹி நிறுவனங்கள் தலா 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து மொத்தமாக ஜவுளித்துறையில் 35 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளன

  • ஷெல் மார்கெட் இந்தியா நிறுவனம் ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளன

  •  


இதுபோக பல நிறுவனங்களும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.