தமிழ்நாட்டில் 4 இடங்களுக்கு சர்வதேச முக்கியத்தும் வாய்ந்த ‘ராம்சார்’ அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டிய ஈர நிலங்களை கண்டறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ‘ராம்சார்’ அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக 4 இடங்களுக்கு ‘ராம்சார்’ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டம் வடுவூர் பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கஞ்சிரங்குளம், சித்தரங்குடி பறவைகள் சரணாலயங்கள், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தேரூர் பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச ஈர நிலத்திற்கு உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 4 இடங்களையும் சேர்த்து மொத்தம் 14 ஈர நில பகுதிகளுக்கு ‘ராம்சார்’ சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டையும் சேர்த்து புதிதாக 11 இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள தூய நீர் ஏரியான தாம்பரா, ஹர்குடி அணைக்கட்டு, அனுஸ்பா ஏரி, மத்திய பிரதேசத்தில் உள்ள யஸ்வந்த் சாகர் அணை, மகராஸ்டிர மாநிலத்தில் அரபிக்கடலோரம் உள்ள தானே கிரீக் பகுதி, ஜம்முகாஷ்மீரில் உள்ள ஹைகாம் ஈரநிலப்பகுதி மற்றும் ஷல்லாபுக் ஈரம் ஆகிய இடங்கள் புதிதாக அங்கீகாரம் பெற்றுள்ளன. புதிதாக கிடைத்த 11 இடங்களையும் சேர்த்து, இந்தியாவை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக, 75 இடங்கள் ராம்சர் அங்கீகாரம் பெற்றுள்ளதும் அதில் 14 இடங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், பிரதமர் நரேந்திரமோடியின் சுற்றுச்சூழல் மீதான அன்பு அக்கறையால் சூழலியல் பாதுகாப்பில் இந்திய மிகப்பெரிய உயரங்களை தொடும் என குறிப்பிட்டு, ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ள 11 இடங்களையும் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
v
அதேபோல், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்பிரியா சாகுவும் தனது டிவிட்டர் பக்கத்தில், மேலும் 4 இடங்களுக்கு ராம்சார் விருது கிடைத்துள்ளதற்கு தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகளை கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் ஈர நிலங்களை உலக அளவில் பாதுகாத்து அங்கீகரிக்க 1971ஆம் ஆண்டு யுனஸ்கோவால் அமைப்பால் ஈரான் நாட்டின் ராம்சார் பகுதியில் ஒரு மாநாடு கூட்டப்பட்டு, அதில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. அதன்படி, ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ராம்சார் பகுதியை மையமாக வைத்தே ராம்சார் அங்கீகாரம் கொடுக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, சரவதேச அளவில் ஈர நிலங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்கும் நோக்கீல் ராம்சார் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.