2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை பாஜக, காங்கிரஸ், பகுஜன் ஜமான் போன்ற 6 தேசியக் கட்சிகள் தமிழகத்தில் போட்டியிட்டன.மாநிலக் கட்சிகளை பொருத்தவரை அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.  மற்ற மாநிலங்களின் கட்சிகளான அனைத்திந்திய பார்வர்டு பிளாக், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போன்ற 10 கட்சிகள் போட்டியிட்டன. பதிவு செய்யப்பட்ட 68 சிறிய கட்சிகளும் தேர்தலை சந்தித்தது. மொத்தமாக 88 கட்சிகள் 2016 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தன. இதில் அதிமுக 130 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது.




இரண்டாவதாக திமுக 86 இடங்களை தன்வசப்படுத்தியது. தேசியக் கட்சியான காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஒரு இடத்தை கைப்பற்றியது. மக்கள் நலக்கூட்டணியாக களமிறங்கிய கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, விசிக ஆகிய கட்சிகள் பலமாக அடிவாங்கியது.  தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, போட்டியிட்ட  அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.


கட்சிகளின் செயல்பாடுகள்:


தேசியக் கட்சியான பாரதிய ஜனதா 188 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. மொத்தமாக பாஜக 12 லட்சத்து 28 ஆயிரத்து 704 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவீத அடிப்படையில் அது 2.84% ஆகும். 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா 25 இடங்களில் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளுமே ஒரு இடத்திலும் வெற்றியை தக்க வைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் மொத்தமாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்குகளை பெற்றது. வாக்கு சதவீதம் 0.78%. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மொத்தமாக 3 லட்சத்து 7 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 0.71ஆக இருந்தது. 


தேசியக் கட்சியில் வெற்றியை ருசித்த கட்சி என்றால் காங்கிரஸ் மட்டுமே. தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டது. அதில் 8 இடங்களில் வெற்றி பெற்றது.மொத்தமாக 27 லட்சத்து 74 ஆயிரத்து 075 வாக்குகளை பெற்றது காங்கிரஸ். வாக்கு சதவீதத்தை 6.42%ஆக பதிவு செய்தது.




தமிழகத்தின் பிரதான மாநிலக் கட்சிகளாக அதிமுக, திமுக, தேமுதிக களம் கண்டன. அதில் அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 135 தொகுதிகளில் வெற்றியடைந்தது. மொத்தமாக 1 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்றது அதிமுக. அதன் மூலம் மொத்தமாக வாக்குசதவீதம் 40.77% ஆக பதிவு செய்தது அதிமுக. 


அடுத்தப்படியாக திமுக 180 இடங்களில் போட்டியிட்டு 88 இடங்களில் வெற்றியடைந்தது. மொத்தமாக 1 கோடியே 36 லட்சத்து 69 ஆயிரத்து 116 வாக்குகளை பெற்று வாக்கு சதவீதத்தை 31.63% ஆக பதிவு செய்தது. 




மக்கள் நலக்கூட்டணியில் கைகோர்த்திருந்த தேமுதிக பெரிய அளவில் சரிவைச் சந்தித்தது. மொத்தமாக 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தமாக 10 லட்சத்து 34 ஆயிரத்து 384 வாக்குகளை பெற்ற அக்கட்சியின், வாக்கு சதவீதம் 2.39% ஆக மட்டுமே இருந்தது. 


மாற்றம் முன்னேற்றம் என்ற பார்முலாவைக் கையில் எடுத்து களம் இறங்கிய பாமக 232 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த பாமக 5.32% வாக்குகளை மட்டுமே பெற்றது. அக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 558 ஆகும். 


மதிமுக 29 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. 0.86% வாக்குகளை பதிவு செய்த மதிமுக மொத்தமாக 3 லட்சத்து 73 ஆயிரத்து 606 வாக்குகளை பெற்றது. 




231 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. மொத்தமாக 4 லட்சத்து 58 ஆயிரத்து 7 வாக்குகளை பெற்ற அக்கட்சியின் வாக்கு சதவீதம் 1.06% ஆகும். 


மக்கள் நலக் கூட்டணியில் அங்கமான விடுதலை சிறுத்தைகள் மொத்தமாக 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த நிலையில் மொத்தமாக 3 லட்சத்து 31 ஆயிரத்து 849 வாக்குகளை பெற்றது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 0.76% ஆகும்.


2021 தமிழக சட்டப்பேரவை 2016 சட்டப்பேரவைத் தேர்தலும் ஒப்பிட்டால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணரலாம். முக்கியமாக ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத வெற்றிடம், கடந்த முறை மக்கள் நலக்கூட்டணியாக இருந்த கட்சிகளில் தேமுதிக தவிர்த்து மற்ற கட்சிகள் இந்த முறை திமுக கூட்டணியில் இருப்பது. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி. வழக்கம்போல் தனித்துபோட்டி என்ற வியூகத்தில் நாம் தமிழர், கடந்த தேர்தலுக்கு பிறகு முளைத்த அமமுகவுடன் கைகோர்த்த தேமுதிக, புதிதாக அரசியலில் குதித்த கமல்ஹாசன் என பல மாற்றங்களுடன் நடந்து முடிந்தது 2021 தேர்தல்.




ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வரப்போகும் முடிவுகளை காண அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருமே ஆர்வமாக உள்ளனர். பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர போவது எந்தக்கட்சி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே இன்று இரவு 7 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிடுகிறது ABP நாடு.