தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார அளவு கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றாற்போ மின்கட்டணம் பெறப்பட்டு வருகிறது. ஆனால், பலரது வீடுகளிலும் மின் கட்டணம் அந்த வீட்டின் அளவு மற்றும் பயன்பாட்டிற்கு தொடர்பே இல்லாத அளவிற்கு மின்கட்டணம் அவ்வப்போது பதிவாகி வருகிறது. 

திடீரென எகிறும் மின்கட்டணம்:

அதாவது, மின் விசிறி, தொலைக்காட்சி, மிக்சி, விளக்குகள் பயன்படுத்தும் சராசரியான வீட்டின் மின்கட்டணமே ரூபாய் 10 ஆயிரம் வந்த கொடுமை அரங்கேறியதும் தமிழ்நாட்டில் நடந்தது.

கணக்கெடுப்பு தவறாக நடந்து இருந்து இந்த தவறு அரங்கேறியிருந்தாலே, மின் மீட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு நடந்து இருந்தாலோ இதுபோன்று நடந்திருக்கலாம். இந்த கட்டணத்தை கணினியில் பதிவேற்றிவிட்டால் அந்த கட்டணத்தை பயனாளர் கட்ட வேண்டிய அவலமும் இருந்து வருகிறது. 

தொடர் புகார்கள்:

தற்போதுள்ள நடைமுறையில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கும் மின் கட்டணத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தாலும், கட்டணத் தொகையை செலுத்திய பிறகே அதை புகாராக அளிக்க முடியும்.

அந்த புகார் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கணக்கீடு தவறு என்று கண்டறியப்பட்டால் அடுத்தடுத்த மின்கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும். இந்த முறையில் எப்படியானாலும் நுகர்வோரே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வருகிறது. இந்த சிக்கலால் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் வேறு வழியின்றி அதிக மின்கட்டணத்தையும் செலுத்திய பரிதாபமும் நடந்தது.

தீர்வு கண்டுபிடித்த மின்வாரியம்:

அதன்படி, இந்த சிக்கலுக்கு தீர்வு காண மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வழக்கமாக மின்கட்டணம் வரும் வீட்டில் திடீரென தொடர்பே இல்லாமல் அபரிமிதமான மின்கட்டணம் வந்தால் அதாவது, 500 ரூபாய் கட்டணம் வரும் வீட்டில் ரூபாய் 5 ஆயிரம் மின்கட்டணம் வந்தால் மின் கட்டணத்திற்கான பதிவேட்டில் கணினி இனி பதிவு செய்யாது. 

இதையடுத்து, மின் கட்டணம் அபரிமிதமாக வந்த வீட்டிற்கு மின்வாரிய அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்வார். அதன்பின்பு, அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவிற்கு மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு மின்கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால், திடீர் திடீரென ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்து அதிர்ச்சிக்குள்ளாகும் மக்கள் நிம்மதி அடைவார்கள். 

மென்பொருள்:

இதற்கான சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்தியுள்ளது. அந்தந்த பயனாளர் எந்தளவு மின்சாரம் பயன்படுத்துவார் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த மென்பொருள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.