ஆளும் அரசுகளின் கோபத்திற்கு ஆளானவர்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது அச்சமூட்டக்கூடிய நாட்களாகவே பெரும்பாலும் இருக்கும். வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டால் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகமுடியாது என்பதுதான், வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் அரசியல் கைது நடவடிக்கைகளுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. 2001-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 143 இடங்களில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்தது. வெறும் 31 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியானது திமுக, புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா பொறுப்பேற்ற உடனேயே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் கவனம் செலுத்தினார்.



சென்னை மாநகராட்சி ஆணையராக ஜே.சி.டி.ஆச்சாரியலுவை நியமித்தார். இவர் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகரில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் 12 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக 2001 ஜூன் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் சிபிசிஐடி காவல்துறையிடம் புகாரளிக்கப்படுகிறது. இப்புகாரைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு மைலாப்பூரில் உள்ள ஆலீவர் ரோட்டில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற காவல்துறையினர் மேம்பால ஊழல் வழக்கில் கருணாநிதியை கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டபோது ”ஐயோ கொல பண்றாங்க...ஐயோ கொல பண்றாங்க..” என்ற சத்தத்துடன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், சட்ட நடைமுறைகளுக்கு மாறாக காவல்துறை செயல்பட்டதாக இன்னும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.



நள்ளிரவில் மைலாப்பூரில் உள்ள ஆலீவர் ரோட்டில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மேம்பால ஊழல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் கருணாநிதியை கைது செய்வதற்காக வந்துள்ளதாக கூறுகின்றனர். உடனடியாக இந்த செய்தி கருணாநிதிக்கு தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மத்திய அமைச்சராக இருந்த முரசொலிமாறனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கருணாநிதி தனது இரவு உடையை மாற்றி காவல்துறையினருடன் புறப்பட தயாராகும் போது வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 


கருணாநிதி கைது செய்யப்பட்ட உடன் அவர் எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார் என்ற தகவலும் காவல்துறையினர் அவரை எங்கே வைத்திருக்கின்றனர் என்ற தகவலும் அவர்களது குடும்பத்தினருக்கு தெரியாமலேயே இருந்தது. கருணாநிதி கைதை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். வேப்பேரி காவல்துறை அலுவலகத்திற்கு கருணாநிதி கொண்டு வரப்படுவதாக வந்த தகவலையடுத்து மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு. முரசொலி மாறன் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.ஆர்.பாலு காவல்துறையினரால் குண்டுக்கட்டாக தூக்கி எறியப்பட்டார். முரசொலி மாறன் காவல்துறையினரால் தள்ளிவிடப்பட்டதில் காயம் அடைந்தார். மேலும் இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மத்திய அமைச்சர் ஒருவர் மாநில போலிசாரால் கைது செய்யப்பட்டது கருணாநிதி கைது சம்பவத்தின் போதுதான் நிகழ்ந்தது. காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுக்க வழக்கில் டி.ஆர்.பாலு அப்போது கைது செய்யப்பட்டிருந்தார்.



நீண்ட அலைக்கழிப்புக்கு பின்னர் கருணாநிதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திலும், பின்னர் சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் வீட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டார். இதே வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர் நம்பியாரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் ஜூலை 10-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதுடன், கருணாநிதியின் உடல்நிலையை அவரின் சொந்த மருத்துவரும் அரசு மருத்துவர்கள் குழுவும் பரிசோதித்து சிறைக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டார். 



இதனையெடுத்து கருணாநிதியுடன் அவரது மகள் கனிமொழியும் காவல்துறை வாகனத்தில் செல்லும் போது காவல்துறையினர் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதிக்காமல் சென்னை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இதனையறிந்த கருணாநிதி, சென்னை மத்திய சிறையின் வாசலிலேயே தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி அரைமணி நேரம் மகள் கனிமொழியுடன் தர்ணாவில் ஈடுபட்டார். 



கருணாநிதி கைது தேசிய அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அறிந்த அன்றைய பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பாத்திமாபீவியிடம் அறிக்கை கேட்குமாறு அன்றைய குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணனை கேட்டுக் கொண்டார். அரசியல் சட்டத்தை காப்பாற்ற தவறியமைக்காக தமிழ்நாடு ஆளுநர் பாத்திமாபிவியை நீக்குமாறு மத்திய அமைச்சரவை குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் ஆளுநர் பாத்திமாபீவி பதவி விலகினார். 


 



கருணாநிதியை காவல்துறையினர் கைது செய்ததற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வரை திமுக இப்பிரச்னையை கொண்டு சென்றது. புகார் பெறப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்து அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி எழுதுகையில் "சட்டத்தை நிலை நாட்டுவதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது, இந்த வழக்கில் ஆரம்பக் கட்டத்திலேயே நன்கு தெரிகிறது" என குறிப்பிட்டிருந்தார். 


கருணாநிதியின் கைதின் போது காவல்துறையின் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையிலான ஒரு கமிஷனை அதிமுக அரசு அமைத்த நிலையில், அந்த கமிஷனிடம் இருந்து இறுதிவரை அறிக்கை பெறவே இல்லை, ஒரு நபர் கைது செய்யப்பட்ட 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற சட்டவிதிகள் இருந்த நிலையில் 2005-ஆம் ஆண்டில்தான் மேம்பால ஊழல் வழக்குக்காக சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.