காவிரி விவகாரத்தால் தமிழ்நாடு - கர்நாடக மாநிலகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம், பல ஆண்டுகளாக பிரச்னையாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தராமல் இழுத்து அடித்து வருகிறது.
மீண்டும் விஸ்வரூபம் எடுத்த காவிரி விவகாரம்:
கர்நாடக அணைகளில் இருந்து 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கேட்டு முதலில் தண்ணீரை திறந்து விட்டாலும் பின்னர், தண்ணீர் தருவதை கர்நாடக நிறுத்தியது.
பின்னர், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை தர வேண்டிய சூழலுக்கு கர்நாடகா தள்ளப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதற்கு கன்னட அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இச்சூழலில்தான், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று பந்த் நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுகின்றனரா?
பந்த்-இல் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பந்த் காரணமாக பெரும்பாலான கடைகள், ஷாப்பிங் மால்களும் மூடப்பட்டன. சாலைகளில் குறைவான எண்ணிக்கையிலேயே வண்டிகள் ஓடின. அங்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அங்கும் இங்குமாய் சில வன்முறை சம்பவங்கள் வெடித்தன. குறிப்பாக, ஜெயகரில் உள்ள மூன்று ஹோட்டல்கள் சேதப்படுத்தப்பட்டன. இம்மாதிரியான சூழலில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்களை விஷமிகள் சிலர், வலைதளங்களில் பரப்பினர். இது, இரு மாநில மக்களிடையே மேலும் பதற்றத்தை தூண்டியுள்ளது.
இந்த நிலையில், வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
"சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்"
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நதி நீர் பிரச்னை சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Edappadi K. Palaniswami : ’திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுக்க ஸ்கெட்ச்’ எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான்..!