அதானிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "அதானி முதல்வரை சந்தித்ததாக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு வைப்பதில் அர்த்தம் இல்லை.
"முதல்வரே தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார்"
முதல்வர் தெளிவாக கூறிவிட்டார். மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக கூறியுள்ளார். நாங்கள் இது குறித்து விவாதத்திற்கும் தயார் என கூறி விட்டோம். தமிழ்நாடு அரசுக்கும் அதானிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இது தொடர்பாக முதல்வரும் சட்டசபையில் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. அதனால், அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை" என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாடு அரசுக்கும் அதானி நிறுவனத்திற்கும் மின் கொள்முதல் தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாகவும், அதில் முறைகேடு இருப்பதாகவும் கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கால் இந்த விவகாரம் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்தது.
அதானி விவகாரம்:
இம்மாதிரியான சூழலில், அதானியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்ததாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “அதானியுடன் முதலமைச்சருக்கு தொடர்பு இருக்கிறது, அதானியை முதலமைச்சர் சந்தித்துள்ளார் என பேசி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதானி குழும முதலீடு குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்து விளக்கியுள்ளார்.
அதானி முதலீடுகளை வைத்து தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைப்பவர்களுக்கு நான் எழுப்பக்கூடிய கேள்வி என்னவென்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும். அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க. மீது குறை சொல்லிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வோ, பா.ம.க.வோ இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க தயாராக இருக்கிறதா? நாங்கள் நாடாளுமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையை ஆதரித்து விளக்கிப் பேச நீங்கள் ஆதரவு தருவீர்களா? என்பதை நான் கேட்கிறேன்.
இதற்கு நான் விளக்கமே சொல்லவில்லை. உரிய அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் அதற்கு விளக்கம் அளித்தார். அவர் இல்லை. அதனால்தான் நான் எழுந்து விளக்கம் சொல்கிறேன்" என்றார்.