தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி வரும் 18ம் தேதி இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட உள்ளது.


மாநில தினம்:


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நிர்வாக காரணங்களுகாக மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.  அவ்வாறு பிற மாநிலங்களில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக அறிவிக்கப்பட்ட தினத்தை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மாநில மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. ஆனால், சென்னை மாகாணத்தில் இருந்து தான் ஒருங்கிணைந்த ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பிரிந்ததே தவிற, தற்போதுள்ள தமிழ்நாடு எந்த மாநிலத்தில் இருந்தும் பிரியவில்லை. மாறாக சென்னை மாகாணம் தான் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருந்தாலும் தமிழகத்திற்கு என மாநில தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமல் இருந்தது.


தமிழ்நாடு நாள்:


இந்த நிலையில்,  இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநில தினமாக கொண்டாடப்படும் என கடந்த 2019ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவிப்பானை ஒன்றை வெளியிட்டது.


அதன்படி, நவம்பர் 1ம் தேதி எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது. எனவே,  1986ம் ஆண்டு  ஜுலை 18ம் தேதி மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை மாற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று அண்ணா பெயரிட்ட நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.


தமிழ்நாடு உருவான பின்னணி?


1956ம் ஆண்டு மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரிந்து சென்றன. வடக்குப் பகுதி ஆந்திர மாநிலத்திற்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1957ல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தொடங்கினார்.


உண்ணாவிரதம் துவங்கிய 76வது நாள் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. தொடர்ந்து,  தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியது.


இந்த நிலையில்தான் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டத் தீர்மானித்தது. அதற்கான தீர்மானத்தை 1967 ஜூலை 18ஆம் தேதி முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் சென்னை மாநிலத்திற்கு  தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.


அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜுலை 18ம் தேதியை  தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என திமுகவும், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில தினமாக கொண்டாடப்பட வேண்டும் என அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் தற்போதைய சூழலில் தமிழ்நாடு அரசு சார்பில், ஜுலை 18ம் தேதி தான் மாநில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.