ஜுலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், நம் மாநிலத்திற்கே உரித்தான சில சிறப்பம்சங்கள் குறித்து இங்கு அறியலாம். 


தமிழ்நாடு நாள்:


சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டதற்கான தீர்மானத்தை 1967ம் ஆண்டு ஜுலை மாதம் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து அப்போதையை முதலமைச்சர் அண்ணாதுரை நிறைவேற்றினார். அந்த நாளை தான் தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என திமுகவும், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில தினமாக கொண்டாடப்பட வேண்டும் என அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் தற்போதைய சூழலில் தமிழ்நாடு அரசு சார்பில், ஜுலை 18ம் தேதி தான் மாநில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


தமிழ்நாடு எனும் பெருமை:


இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் இருந்து எப்போதுமே தமிழ்நாடு தனித்துவமாக விளங்குகிறது என்பதில் எந்த ஐயமும் கொள்ள வேண்டியதில்லை. கலாசாரம், மொழி மற்றும் பண்பாடு உள்ளிட்டவற்றில், உலகிற்கே தமிழ்நாடு தான் முன்மாதிரி. பல முற்போக்கு சிந்தனைகளை  மக்கள் எளிதாக புரிந்துகொண்டு அவற்றை கடைபிடிக்க முயற்சி செய்வது தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம்.  பல்வேறு மாநிலங்களிலும் இன்றளவும் பெயரின் பின்பு ஜாதியை பெயரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் அதனை தவிர்த்து வருவதை நம்மால் காண முடியும்.


வரலாற்றுச் சிறப்பு:


உலக நாகரீகத்திற்கு எல்லாம் பிள்ளையார் சுழி என்றால் அது தமிழர் நாகரீகம் தான். பெரும்பாலான நிலப்பகுதி காடுகளாகவும், மலைகளாகவும் இருந்தபோதே கற்களை சிலையாக வடித்தும், நகர கட்டுமானத்தை தொடங்கியவனும் தமிழன் தான். மற்ற பகுதி மக்கள் பேசவே தட்டு தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், இலங்கியங்களை அரங்கேற்றம் செய்தவன். நெசவு, வணிகம், போர், அரசாட்சி, கப்பல் கட்டுமானம்,  என்றால் என்ன என்பதை எல்லாம் உலகிற்கே அடையாளப்படுத்தியவன். திட்டமிட்டு கட்டப்பட்ட முதல் நகரம் என்பதை, கிழடி அகழ்வாராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.  தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது, தமிழர்களுக்கு கிடைத்த கூடுதல் பெருமை. 


மொழியும், இலக்கியமும்:


எழுத்து வடிவமும், பேச்சு வடிவம் மற்றும் இலக்கிய வடிவம் கொண்ட ஒரு சில சொற்ப மொழிகளில் தமிழும் ஒன்று. உலக பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறளும் தமிழர்களின் பாரம்பரிய சொத்தே. ஐம்பெருங்காப்பியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என இலக்கியங்களுக்கு பஞ்சமில்லா ஒரு சமூகம் தமிழ் சமூகம். சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமை எல்லாம் வரலாற்றில் வேறு யாருக்கு உண்டு. உலகின் எல்லா பகுதிகளையும் ஆட்கொண்ட பேரரசுகளால் கூட தமிழகத்தை நெருங்க முடியவில்லை. மூவேந்தர்களின் ஆளுமையும், பராக்கிரமும் அத்தகையது. இன்னும் இன்னும் சொல்லப்போனால், நேரமும், வார்த்தைகளும் போதாது. கால்நடைகளை கூட குடும்ப உறுப்பினராகவே கருதும் தமிழர்களின் பண்பாடு, குடும்ப கட்டமைப்பிற்கும், உறவுமுறைகளுக்குமான ஒரு சிறந்த உதாரணமாகும்.


கட்டுமானம்:


பழந்தமிழர்களால் கைகளாலேயே செதுக்கப்பட்ட பல சிலைகள் இன்றளவும், எப்படி உருவாக்கப்பட்டன என்ற ஆச்சரியத்தை தாங்கியவாறு நிலைத்து நிற்கின்றன. தஞ்சை பெரிய கோயில் தமிழரின் கட்டுமான திறனிற்கான ஒரு ஆகச்சிறந்த அடையாளமாகும்.  இதே போன்று பல பழங்கால நினைவுச்சின்னங்கள், வரலாற்று கட்டடங்கள், மத யாத்திரை இடங்கள், மலை வாசஸ்தலங்கள் , கோட்டைகள் மற்றும் மூன்று உலக பாரம்பரிய தளங்கள் ஆகியவற்றின் தாயகமாக தமிழ்நாடு விளங்குகிறது.


தமிழ்நாட்டின் வளர்ச்சி:


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது. ஆனால், காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் முன்னெடுத்த வளர்ச்சி திட்டங்கள், கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகியுள்ளது. குறிப்பாக குழந்தை வளர்ச்சி, சுகாதார பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளன.  அதேபோன்று சேவை துறையிலும், உற்பத்தியிலும் தமிழகம் இந்தியாவின் பொருளாதார தலைவனாக மாறி உள்ளது.


வளர்ச்சியில் முன்னோடி:


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநில அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடம். அதேநேரம், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகமே முதலிடம். நாட்டிலேயே பள்ளிப்படிப்பு முடித்து உயர்கல்வி சேர்ந்து படிப்பவர்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம். புதிய கல்விக் கொள்கை மற்றும் மத்திய அரசின் 2035ம் ஆண்டிற்கான இலக்கே  50 சதவிகிதம் தான். ஆனால் தமிழ்நாடு 15 ஆண்டுகள் முன்னோடியாக திகழ்கிறது. 70 சதவிகிதத்திற்கு நடுத்தர வர்கத்தினர் வசிக்கும் மாநிலம், பொருளாதார பாகுபாடு மிகக் குறைவாக மாநிலமும் தமிழ்நாடு தான்.


நில அமைப்பு:


தென்னிந்தியாவின் நுழைவுவாயில் சென்னை, மலைகளின் ராணி உதகமண்டலம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர், ஆயிரம் கோயில்களின் சங்கமம் காஞ்சிபுரம், முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி, தென்னாட்டு கங்கை காவிரி, ஆசியாவின் நீளமான கடற்கரை மெரீனா என, ஆசிய துணைகண்டத்தின் அடையாளமாக உள்ள இந்தியாவிற்கே ஒரு தனி அடையாளமாக திகழ்கிறது தமிழ்நாடு.