அனைத்து எம்எல்ஏக்களும் மாதத்தில் ஒருநாள் விவசாயிகளிடமும் குறைகளை நேரில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கால்நடை, வேளாண் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வேளாண் துறை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்க விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி, மாதம் ஒருநாள் அனைத்து எம்எல்ஏக்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர், “காளான் உற்பத்திக் கூடம் அமைக்க 100 மகளிருக்கு ரூ.1 கோடி மானியமாக வழங்கப்படும். கரூர், நாகை, சிவகங்கையில் தலா 30 கோடி ரூபாயில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும். மேல்மலையனூர், வல்லம், மாதனூர், அரூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உற்பத்தியை உயர்த்த 25 ஆயிரம் ஏக்கரில் துத்தநாக சல்பேட்டும், ஜிப்சமும் 50 சதவீத மானியத்தால் வழங்கப்படும். தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் 4 அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும். ரூ.1.29 கோடியில் தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்” என்று கூறினார்.




இதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், “கடலூர் மாவட்டம் பெரியகுப்பம், புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை கிராமங்களில் புதிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும். கடலோர கிராமங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்களுடன் கூடிய புதிய மீன் இயங்குதளங்கள் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் உள்ள மீன்பிடி இறங்குதளம் ரூ.10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்” என்றார்.


முன்னதாக காலை, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மூன்று சட்டங்களையும் அரசு ரத்து செய்யவேண்டும் என தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள  பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான் வரிசையில் 7வது மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மத்திய அரசின் மூன்று சட்டங்களும் கூட்டாச்சித் தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் கூறுகையில், மண்னையும், விவசாயிகளையும் காக்கு வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை என்றும், வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரியவில்லை கிடைக்கும் வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளதாகவும் கூறினார். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளதாகவும், சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சி மிகு போராட்டம் நடந்தது இல்லை எனவும் கூறினார். மேலும், ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.