தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1797 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,94,233ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 210 பேரும், சென்னையில் 198 பேரும், ஈரோட்டில் 156 பேரும், சேலத்தில் 103 பேரும், செங்கல்பட்டில் 108  பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; கடந்த 154 நாட்களில் இது மிகக் குறைவு.




குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1,908 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,39,540 ஆக அதிகரித்துள்ளது.  அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். அதே சமயம், நாடு முழுவதும் 37,169 பேர் குணமடைந்தனர். தேசியளவில் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.52 சதவிகிதமாக உள்ளது . 2020 மார்ச்சிலிருந்து இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.


இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,610 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8369 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் (243) பதிவு செய்துள்ளது.  கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 


 சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,225 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,67,415 ஆக உள்ளது


தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி  தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.2 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக இந்த விகிதம் 3 ஆக உள்ளது. சேலம் மாவட்டத்தில் தொற்று உறுதி விகிதம் 2.2 ஆக உள்ளது. தேசியளவில், வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 1.95% ஆக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தற்போது 1.96 விழுக்காடாக உள்ளது. 




0.5 விழுக்காடுக்கும் குறைவாக இருந்த சென்னையின் தொற்று உறுதி விகிதம், தற்போது 0.9 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை 25,௦௦௦ ஆக உள்ள நிலையில், தொற்று உறுதி விகிதம் 1-க்கும் கீழாக இருப்பது நிம்மதி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. 


கொரோனா பரிசோதனை: கடந்த 24 மணிநேரத்தில், 1,57,339 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 4  (4,02,66,227) கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் அதிகமாக இருந்தால், கொரோனா ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.


தொற்று விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்து காணப்படுவதன்  மூலம் சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதை உணர முடிகிறது. இந்த தொற்று உறுதி விகிதம், மூன்றாவது அலையை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   


புதிய அலைகள் வந்தாலும் சமாளிக்கலாம்: புதிய வகை தொற்றுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இந்தியா சயின்ஸ் என்ற ஓடிடி தளத்திற்கு அளித்த பேட்டியில் புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)- தேசிய நுண்கிருமி நிறுவனத்தின் (என்ஐவி) இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார். இருப்பினும், முகக் கவசங்களை முறையாக அணிய வேண்டும்.  தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்த வேண்டும். அதன் பிறகு அலைகள் உருவானாலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.