தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த 9-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதல்வர் நியமித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாவட்டத்திற்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஊரடங்கை கண்காணிக்கும் பொறுப்பு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சேலம் மாவட்டத்திற்கும், திருச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேருவும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஊரடங்கு கண்காணிப்பிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசுவும், ஈரோடு மாவட்டத்திற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், விழுப்புரம் மாவட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானும் ஊரடங்கை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் அமைச்சர் சி.வி.மெய்யநாதன் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை கண்காணிக்க உள்ளார்.
கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை மாவட்டத்திற்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தேனி மாவட்டத்திற்கும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் ஊரடங்கை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் திங்கள் முதல் எந்தவித தளர்வுகளும் இன்றி ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.