தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் இருந்த நிலையில், இன்று முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், இன்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்து 867 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 757-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 985-ஆக குறைந்துள்ளது. இன்று சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 29 ஆயிரத்து 882-ஆக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

Continues below advertisement

சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 151-ஆக பதிவாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 13 ஆயிரத்து 207 நபர்கள் ஆவார்கள். பெண்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 966-ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 38-ஆக பதிவாகியுள்ளது. இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 421 நபர்கள் ஆவர். பெண்கள் 15 ஆயிரத்து 446 நபர்கள் ஆவர். இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 26-ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக கொரோனா உயிரிழப்பு மிகுந்த கவலையளிக்கும் விதமாக பதிவாகிவந்தது. அதிகபட்சமாக சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 467 நபர்கள் உயிரிழந்தனர். ஆனால், பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கிய கொரோனா உயிரிழப்பு இன்று 404-ஆக குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 177 பேர் தனியார் மருத்துவமனையிலும், 227 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆவார். மேலும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872-ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 460-ஆக பதிவாகியுள்ளது.