தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 34 ஆயிரத்து 285 நபர்கள் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரசால் 4 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து, 4 ஆயிரத்து 41 ஆக பதிவாக உள்ளது. சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 30 ஆயிரத்து 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 533 ஆகும்.




இதுவரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 32 ஆயிரத்து 479 ஆக பதிவாகியுள்ளது. பெண்கள் 7 லட்சத்து 78 ஆயிரத்து 979 ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தொற்று உறுதியானவர்களில் இன்று மட்டும் ஆண்கள் 19 ஆயிரத்து 722 ஆகும். பெண்கள் 15 ஆயிரத்து 13 ஆகும். இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 745 ஆகும், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.




கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று தமிழ்நாட்டிலே புதிய உச்சமாக 468 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், திடீரென இன்று புதிய உச்சமாக உயிரிழப்பு அதிகரித்திருப்பது மக்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இன்று உயிரிழந்தவர்களில் 334 நபர்கள் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 134 பேர் எந்த வித பாதிப்பும் இல்லாதவர்கள்.


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் தளர்வில்லாத ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இவற்றின் காரணமாக கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் இன்று கொரோனா உயிரிழப்பு அதிகரித்திருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, காலை தூத்துக்குடியில் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா உயிரிழப்பில் உண்மையான எண்ணிக்கையை கூறினால்தான் மக்களுக்கு பயமும், விழிப்புணர்வும் ஏற்படும்  என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.