தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 361 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 881 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த வாரம் தினசரி 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் கொரோனாவால் 2 ஆயிரத்து 779 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இன்று 30 ஆயிரத்து 582 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்றைய கணக்குப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 624 நபர்கள் ஆவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 69 ஆயிரத்து 810 ஆகும். பெண்கள் 8 லட்சத்து 8 ஆயிரத்து 773 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் ஆவர்.
தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 18 ஆயிரத்து 618 நபர்கள் ஆவர். பெண்கள் 14 ஆயிரத்து 743 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இன்று குணம் அடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 63 நபர்கள் ஆவர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 ஆகும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒருநாள் மட்டும் 474 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 199 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 295 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 723 ஆகும்.