நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் பரவிவருகிறது. இதுவரை இல்லாத வகையில், நேற்று மட்டும் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உறுதி செய்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8,078 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர். நேற்று மாநிலம் முழுவதம் 59 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 842 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 9 ஆயிரத்து 932 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 487-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 8 ஆயிரத்து 432 நபர்களும், பெண்கள் 5 ஆயிரத்து 344 நபர்களும் ஆகும். கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 8 ஆயிரத்து 078 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 044 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 44 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்களாக இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் இன்று 37 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 048-ஆக இருக்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.