ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசுப்பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை என்று அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்திலும் இதை செயல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்.
தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!
எழுத்துத் தேர்வுகளில் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலமாகவே தேர்வுகள் நடத்தப்பட்டு வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பதவிகளின் தகுதிக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என்று தேர்வுகள் பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது இவற்றில் குரூப் 1 தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் சில காலம் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.