முதலமைச்சரின் தனிச்செயலாளர் உமாநாத் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த போது, பட்டா வழங்கியதால் அவரது பெயரை கிராம மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு சூட்டியுள்ளனர்.


 

தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் பெயர் இருப்பதை பார்த்திருப்போம். கோவை அருகே ஒரு பகுதி தற்போது பணியில் உள்ள ஒரு அரசு அதிகாரியின் பெயரை தாங்கியுள்ளது என்றால், அது உமாநாத் பெயர் மட்டும் தான்.



 

சாதாரண மக்கள் கோரிக்கை மனுக்களோடு அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து அலைந்து திரிந்தாலும், அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பது என்பதே அரிது. அதிலும் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அதனினும் அரிது. அப்படி உதவி செய்த அதிகாரிகளை காலப்போக்கில் மக்களும் மறந்து விடுவது வழக்கம். ஆனால் கோவை மாவட்டத்தில் உதவி செய்த ஆட்சியரை காலந்தோறும் நினைவு கூறும் வகையில், ஆட்சியரின் பெயரை தங்களது பகுதிக்கு சூட்டி, கிராம மக்கள் நன்றிக்கடன் செலுத்தி வருகின்றனர்.



 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ளது விராலிக்காடு பகுதி. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2011 ம் ஆண்டிற்கு முன்பு வரை இப்பகுதி மக்களுக்கு பட்டா இருக்கவில்லை. 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 



 

கோரிக்கை மனு, போராட்டம் என பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்ட நிலையிலும், எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2011 ம் ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த உமாநாத்திடம், விராலிக்காடு பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.



 

இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் உமாநாத் 2 ஏக்கரில் குடியிருந்து வரும் 80 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது. அரசு அதிகாரியாக தனது பணியை ஆட்சியர் உமாநாத் செய்திருந்தாலும், உதவி செய்த ஆட்சியரை காலந்தோறும் நினைவு கூறும் வகையில், அப்பகுதிக்கு கலெக்டர் உமாநாத் காலனி என பெயர்சூட்டி அப்பகுதி மக்கள் நன்றிக்கடன் செலுத்தி வருகின்றனர்.



 

2011 க்கு பிறகு பணி மாறுதல் காரணமாக உமாநாத் பல்வேறு பொறுப்புகளுக்கு சென்ற நிலையிலும், கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதி கலெக்டர் உமாநாத் காலனி என்ற பெயரை தாங்கி வருகிறது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளர்களில் ஒருவராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், "30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய கலெக்டருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இப்பகுதிக்கு கலெக்டர் உமாநாத் காலனி என பெயர் வைத்தோம்.

 



தற்போது முதலமைச்சரின் தனிச்செயலாளர்களில் ஒருவராக உமாநாத் நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு உதவி செய்தது போல தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தனர்.

 

முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகள் நியமனம் பரவலாக பாராட்டை பெற்று வரும் நிலையில், தங்களது ஊருக்கு உதவி செய்த உமாநாத் முக்கிய பொறுப்பிற்கு வந்திருப்பது கலெக்டர் உமாநாத் காலனி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.