காங்கிரஸில் உட்கட்சி பூசல் வெடிப்பது என்பது புதிதல்ல. அந்த வகையில், நேற்று தமிழ்நாடு காங்கிரஸின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாக காணப்பட்டது. சில நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.


திருநெல்வேலி நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக ரூபி மனோகரன், கட்சியின் மாநில பொருளாளராகவும் உள்ளார்.


திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸில் இவர் நியமித்த நிர்வாகிகளுக்கு பதிலாக கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதனால் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.


இதையடுத்து, நேற்று ரூபி மனோகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஜெயகுமாருக்கு எதிராக புகார் அளிக்க சென்று இருந்தார். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


ரூபி மனோகரனின் உருவ பொம்மையை நேற்றிரவு நாங்குநேரியில் துரைராஜ் என்பவர் தலைமையில் காங்கிரசார் சிலர் எரிக்க முயற்சித்தனர்.


போலீசார் அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்ததோடு எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் கே. எஸ். அழகிரியை ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் மோதல் ஏற்பட்டது.


காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமாரை மாற்றக்கோரி ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் நேற்று சத்தியமூர்த்தி பவனில் முற்றுகையிட்டனர்.


நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரியை ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் முற்றிகையிட்டதால் மோதல் வெடித்தது. இந்த மோதலலில் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். 


இதை தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக இன்று மாவட்ட தலைவர்கள் கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.


அதில், போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து நீக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 நாட்களில் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானம் அனுப்பப்பட்டது.


கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் உட்கட்சி பூசலில் சிக்கி காங்கிரஸ் தவித்து வருகிறது. இதன் காரணமாக, பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது குறிப்பிடத்தக்கது.